கடலோர மேலாண்மை திட்டக் கூட்டம்..! துாத்துக்குடியிலும் மீனவர்கள் எதிர்ப்பு

கடலோர முறைப்படுத்துதல் மேலாண்மைlத் திட்டத்திற்கு துாத்துக்குடியிலும் மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கருத்து கேட்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. 

இந்தியாவின் கடலோர பகுதிகளை முறைப்படுத்தி பாதுகாக்கும் திட்டம் கடந்த, 1991-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 1996 -ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. பின் இந்தத் திட்டம், 2011ம் ஆண்டு மீண்டும் புதிதாக அறிவிக்கப்பட்டு, இப்போது அதனை செயல்படுத்த, கடற்கரை மேலாண்மை ஒழுங்குமுறைக்கான மக்கள் கருத்துகேட்பு கூட்டம்,  தமிழகத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன எனவும் முந்தைய திட்டத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என மீனவர்கள் சொல்லி வருகின்றனர். ஏற்கனவே, நெல்லை, கன்னியாகுமரியில் நடந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், நேற்று  துாத்துக்குடி மாவட்டத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முத்தையாபுரத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலர்  வீரப்பன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர் கண்ணன், அரசு அதிகாரிகள் மீனவர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர். 

தமிழக அரசின் இக்கருத்து கேட்புக்கூட்டம் குறித்து மீனவர்களுக்கு முறையான அறிவிக்கை செய்யப்படவில்லை எனவும், இத்திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவும் கூட்டம் தொடங்கியவுடன் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கருத்து கேட்புக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர் கண்ணன் தெரிவித்தார். தொடர்ந்து மீனவர்கள் தங்களது எதிப்பினை பதிவு செய்யும் வகையில் கூட்ட அரங்கு முன்பாக கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!