‘வயலில் கொத்துக் கொத்தாக இறந்து கிடந்த மயில்கள்!’வனத்துறை அதிகாரிகள் விசாரணை.

மயில்கள்

ஈரோட்டில் விவசாயி ஒருவரின் வயற்காட்டில் மயில்கள் கொத்துக் கொத்தாக இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் தோப்புக்காடு காலனி பகுதியில், சீதப்பன் என்ற விவசாயி, தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். தற்போது இந்த தோட்டத்தில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில், குச்சிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளார். 

இந்தநிலையில், நேற்று இரவு அவரது தோட்டத்தில் 2 ஆண் மயில், 6 பெண் மயில் என மொத்தம் 8 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதியினர் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலையடுத்து, ஈரோடு சிறப்பு பணி வனவர் சரவணன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்த கிடந்த மயில்களைக் கைப்பற்றினர். மேலும், சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவரை வரவழைத்து மயில்களுக்கு உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டு, மயில்களின் உறுப்புகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறுகையில், “தோப்புக்காடு காலணி சுற்றுப்பகுதிகளில் உள்ள தோட்டத்து உரிமையாளர்கள் சிலர் மயில், கோழி உள்ளிட்ட பறவைகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க, விஷம் கலந்த தானியங்களை தோட்டங்களில் வைக்கின்றனர். ஒருவேளை அப்படி விஷம் கலந்த தானியங்களை தின்று இந்த மயில்கள் இறந்திருக்கலாம். கடந்த 6 மாதங்களில் மட்டும் இப்பகுதியில் விஷம் கலந்த உணவைத் தின்று, 50-க்கும் மேற்பட்ட கோழிகள், 10-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இறந்துள்ளன” என்று பகீர் கிளப்பினர்.

மயில்களின் இறப்பு குறித்தான ஆய்வின் முடிவில் தான், மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? அல்லது நோய் தாக்கி இறந்ததா? என்பது தெரியவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!