வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (29/04/2018)

கடைசி தொடர்பு:14:36 (29/04/2018)

'முடிஞ்சா பிடிச்சுக்கோ.. எங்கேயும் திருடுவோம்!' திண்டுக்கல்லில் அதிகரிக்கும் செயின் பறிப்பு

போலீசுக்கு சவால்விடும் திருடர்கள்...

செயின் பறிப்பு

"நடுராத்திரியில் ஒரு பெண் தனியாக சாலையில் நடந்து போகக்கூடிய நிலை என்றைக்கு வருகிறதோ.. அன்றைக்குதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஒப்புக்கொள்வேன்" என்றார் மகாத்மா காந்தி. சுதந்திரம் வாங்கி பொன்விழா ஆண்டைத் தாண்டிவிட்டோம். ஆனாலும், இன்றைக்கு ஒரு பெண் தனியாக நடமாடுவதில் எத்தனை சிக்கல். பெண் குழந்தைகள் கூட நடமாட முடியவில்லை. நகை போட்டுக்கொண்டு சாலையில் போகும் பெண்கள், உயிரை கையில் பிடித்தபடியே பயணிக்க வேண்டியுள்ளது. ஹெல்மெட் அணிந்தபடி எதிரே வரும் நபர்களை சந்தேக பார்வையுடன் கடக்க வேண்டியிருக்கிறது. பட்டப்பகலிலே இந்த நிலை என்னும் போது, இதில் இரவு நேரத்தில் சென்றால் அதோகதிதான்.

செயின் பறிப்புதற்போது, தமிழகம் முழுவதும் பரவலாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் செயின் பறிப்பு நடப்பது வாடிக்கையாகிவிட்டது. 'பங்குனி உத்திரம் சீசன் காலத்தில், பழநியில் ஒரு கும்பல் இறங்கியிருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும்' என காவல்துறையினருக்கு உளவுத்துறையினர் தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீஸார் ரோந்து செல்வதை அதிகப்படுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள். ஆனால், திருடர்கள், அலட்டிக்கொண்டதாகவே தெரியவில்லை. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டார்கள். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வாரத்தில் திண்டுக்கல் தாலூகா காவல்நிலையம் அருகே ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பு நடந்தது. போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே செயின் பறித்ததன் மூலமாக, போலீசால் தங்களை பிடிக்க முடியாது என சவால் விட்டுச் செல்லும் தொனியில் அந்தச் செயல் இருந்தது. தொடர்ந்து அதே நாளில் மேலும் இரண்டு பெண்களிடம் சங்கிலி பறிப்பு நடந்தது. உச்சகட்டமாக இரண்டு தினங்களுக்கு முன்பு காலையில், எப்போதும் போலீசார் நடமாட்டம் உள்ள எஸ்.பி அலுவலகத்துக்கு சில அடி தூரத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு நடந்துள்ளது. இது பொதுமக்களை மட்டுமல்லாமல் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

எஸ்.பி. சக்திவேல்செயின் பறிப்பு சம்பவங்கள் மட்டுமல்லாமல், பட்டப்பகலில் வீடுகளில் கொள்ளைப் போகும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆள் நடமாட்டம் அதிகமுள்ள ஆசிரியர் காலனியில், பட்டப்பகலில் வீடு புகுந்து 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். இதுபோன்ற தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளார்கள். கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்லத் திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் திட்டத்தை மாற்றிக்கொண்டு வீடுகளிலேயே இருக்கும் சூழல் நிலவுகிறது. ஏப்ரல் மாதல் முதல் நடந்துவரும் தொடர் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. மின்னல் போல எங்கிருந்தோ வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கிலி பறித்துச் செல்லும் திருடர்களால் சாலையில் நடமாடவே திண்டுக்கல் பெண்கள் அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்து திருடர்களை கைது செய்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மாவட்டத்தில் வலுத்து வருகிறது. சவால்விட்டு திருடும் திருடர்களை பிடித்து போலீஸ் கெத்தை காட்டுவாரா திண்டுக்கல் எஸ்.பி. சக்திவேல் என்ற எதிர்பார்பு அதிகரித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்