அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு முற்றுகை! - 700க்கும் மேற்பட்டோர் கைது

குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யக்கோரி இலுப்பூரில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற 2 எம்.எல்.ஏ உள்பட 765 திமுக-வினரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் இலுப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்அமைச்சர், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு எதிரான குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மறுநாளே, சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை திலகர் திடலில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்லபாண்டியன், "தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி இதே கோரிக்கையை வலியுறுத்தி, சனிக்கிழமை காலை 10 மணியளவில் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.


இதனையடுத்து இலுப்பூர் பகுதியில் நேற்று முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையைத் தடுக்கவும்,அமைச்சர் வீட்டைப்  பாதுகாக்கவும் நேற்று முன் தினம் (27.04.2018) மாலை முதல் அமைச்சரின் வீடு, அவருக்குச் சொந்தமான கல்லூரி, உள்ளிட்ட  பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு பணிகளை திருச்சி சரக டி.ஐ.ஜி லலிதாலெட்சுமி தலைமையிலான சுமார் 350-க்கும் மேற்பட்ட போலீசார்  ஈடுபடுத்தப்பட்டனர்.

மாவட்ட தி.மு.க அறிவித்தபடி நேற்று காலை அமைச்சர் வீடு இருக்கும் இலுப்பூர் கோட்டைதெரு பகுதியில் தி.மு.க-வினர் திரண்டனர். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கரோ, முன்பே திட்டமிடப்பட்டபடி கல்லாலங்குடி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கச் சென்றுவிட்டார். காலை 10.30 மணியளவில் தி.மு.க-வினர்  அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகியோரைப் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோருக்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் திருமயம் தொகுதி  எம்.எல்.ஏவுமான ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பழனியப்பன், ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன்,  அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரன்,  வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளைக்கழக திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் வீடு நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற 243 பெண்கள் உள்பட 765 திமுக வினரை இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே தடுத்து நிறுத்திய மாவட்ட எஸ்.பி செல்வராஜ் தலைமையிலான போலீசார், அவர்களைக் கைது செய்து இலுப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும்  இன்று மாலை 6-மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரவு 8.30மணி வரை யாரும் விடுதலை செய்யப்படவில்லை. இதனால், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி,மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நாளைச் சாலை மறியலில் ஈடுபட, திமுகவினர் முடிவு செய்து இருக்கிறார்கள்.இதனால்  புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!