மைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது!

இளைஞர்

ஈரோட்டில் மைனர் பெண் ஒருவரை கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் ஒருவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த ஆயிக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த சின்னச்சாமி - பவளக்கொடி தம்பதியினரின் மூத்தமகன் ஆனந்தராஜ் (22). கட்டடத் தொழிலாளியான ஆனந்தராஜூக்கு, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒன்றரை மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த நிலையில், ஆனந்தராஜ் மனைவியைப் பிரிந்தார்.

இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி அவரது வீட்டின் அருகே வசித்த 17 வயது மைனர் பெண்ணுடன், வீட்டைவிட்டு வெளியேறி, ஆனந்தராஜ் காதல் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து, அந்தப் பெண்ணின் தந்தை பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால், கடும் மன உளைச்சல் ஏற்பட்டு, ஆனந்தராஜின் தந்தை, தாய், தம்பி ஆகிய மூன்று பேரும் சாணிப்பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.

இதற்கிடையே, ஆந்திராவில் மைனர் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த ஆனந்த்ராஜை போலீஸார் கைது செய்தனர். மைனர் பெண்ணை திருமணம் செய்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆனந்த்ராஜை சிறையிலடைத்தனர். மேலும், இதற்கு உறுதுணையாக இருந்த ஆனந்த்ராஜின் நண்பர் முருகன் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!