'இனி போர்வெல் போடாதீங்க..!' - தடைபோட்ட கலெக்டர்; அதிர்ச்சியில் அதிகாரிகள் | Dindigul water crisis - Collector banned Borewell works

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (29/04/2018)

கடைசி தொடர்பு:17:00 (29/04/2018)

'இனி போர்வெல் போடாதீங்க..!' - தடைபோட்ட கலெக்டர்; அதிர்ச்சியில் அதிகாரிகள்

குடிநீர் தட்டுப்பாடு

திண்டுக்கல்லுக்கும் குடிநீர் பிரச்னைக்கும் அப்படியொரு பொருத்தம். கடும் மழைக்காலங்கள் தவிர, மற்ற மாதங்களில் குடிநீருக்கு எப்போதும் சிக்கல்தான். அதிலும் கோடைக்காலம் தொடங்கி விட்டால் போதும், கடுமையான தட்டுப்பாடு ஏற்படும்.

 

குடிநீர் தட்டுப்பாடு

திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வருபவர்களில் பெரும்பாலும் குடிநீர் கேட்டு வருபவர்கள் தான் அதிகம். கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காலி குடங்களுடன் மக்கள் சாலையை மறிக்கத் தொடங்கிவிட்டார்கள். தொலைநோக்கு திட்டங்கள் இல்லாத நிர்வாகத்தால், பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க முடியவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தின் சராசரி மழையளவு 836 மி.மீ. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்டத்தில் சராசரி மழையளவுகூட மழை பெய்யவில்லை. சென்ற ஆண்டு 532 மி.மீ மழைதான் கிடைத்தது. இதனால் போதுமான தண்ணீர் இல்லாமல் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. 

மாவட்டத்தில் உள்ள 2632 நீர்நிலைகளும் தற்போது வறண்டு கிடக்கின்றன. நீர்நிலைகள் வறண்டுப் போனதால், நிலத்தடிநீர் வளமும் குறைந்து விட்டது. இதனால் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான கிணறுகள் தூர்ந்து கிடக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது.

தற்போது எழுந்துள்ள கடும் தட்டுப்பாட்டைப் போக்க, ஊராட்சிகள் தோறும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து பிரச்னையை தற்காலிகமாகச் சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினார்கள். ஆனால், அதிலும் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நிலத்தடி நீர் மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. நூறு போர்வெல் அமைத்தால் ஐந்தில் ஒன்றில்தான்  தண்ணீர் கிடைக்கிறது. அதுவும் போதுமான அளவுக்கு இல்லை. பல இடங்களில் ஆயிரத்து 400 அடி ஆழத்துக்கு போர்வெல் அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென தெரியாமல் அதிகாரிகள் கையை பிசைந்து வருகிறார்கள். அடிக்கடி போராட்டம் நடத்தும் பகுதிகளுக்கு மட்டும் லாரிகள் மூலமாகத் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. 

எரியும் வீட்டில் பிடுங்கும் வரை லாபம் என்ற கணக்கில் சில அதிகாரிகள் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. குறைந்த ஆழத்துக்கு போர்வெல் போட்டுவிட்டு, ஆயிரம் அடிக்கு மேல் போர்வெல் அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை என பொய் கணக்கு சொல்கிறார்கள். ஒரு போர்வெல் அமைத்தால் ஒன்றரை லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. ஆனால், பெரும்பாலான இடங்களில் இந்த தொகையை அதிகாரிகள் சுருட்டிக்கொள்கிறார்கள். இதனால் வெறுத்துப்போன மாவட்ட ஆட்சியர் வினய், ‘‘இனிமேல் மாவட்டத்தில் போர்வெல் அமைக்கவேண்டாம். போர்வெல் அமைத்தும் தண்ணீர் கிடைக்காது என்ற நிலையில், பணத்தை விரயமாக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, மாவட்டத்தில் தற்போது இருக்கும் நீராதாரங்களில் இருப்பு உள்ள நீரை, பகிர்ந்துக்கொடுக்கும் முயற்சியை மேற்கொள்ளுங்கள் என உத்தரவிட்டுள்ளார். கலெக்டரின் உத்தரவு, போலியாக போர்வெல் கணக்கு எழுதும் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க