வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (29/04/2018)

கடைசி தொடர்பு:17:30 (29/04/2018)

'அடுத்த சந்ததி உறுப்புகள் இல்லாமல் பிறக்கும் நிலை வரும்!’ - ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில் சமுத்திரகனி

"ஸ்டெர்லைட் நச்சுத் தொழிற்சாலையால் மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் பாதிப்பால் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிரந்தரமாக மூடப்படாவிட்டால், அடுத்த சந்ததி உறுப்புகள் இல்லாமல் பிறக்கும் நிலை ஏற்படும்" என இயக்குநர்  சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். 

Director samuthira kani

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமாரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 80 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனுடன் 18 கிராம மக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல, தூத்துக்குடி பனிமய மாதா ஆலய  வளாகத்திலும் கடந்த 15 நாட்களாகத் தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை  இயக்குநர்  சமுத்திரக்கனி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், " ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டம் இன்று நேற்று நடைபெறும் போராட்டம் அல்ல. கடந்த 23 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வரும் நிலையில் இப்போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாதது மிகவும் வருந்தமளிக்கிறது. இதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

இந்த நச்சுத்  தொழிற்சாலையால் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். மூச்சுத்திணறல் முதல் புற்றுநோய் வரை பல நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆலையை  அகற்றாவிட்டால் அடுத்த சந்ததி உறுப்புகள் இல்லாமல் பிறக்கும் நிலை ஏற்படும். இந்த  ஆலையைத் தடை செய்ய வேண்டும். நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் ஒன்று திரண்டு போராடியது போல ஸ்டெர்லைட் ஆலைக்காக இளைஞர்கள் போராடும் காலம் விரைவில் வரும். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் நடைபெறும் என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க