சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளோடு சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்! | People protest against Salem Two Chennai Road

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (29/04/2018)

கடைசி தொடர்பு:21:30 (29/04/2018)

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளோடு சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்!

நாட்டின் இரண்டாவது பசுமைச் சாலையாக சேலம் - சென்னை இடையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச் சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த சாலை திட்டத்திற்கு முதல் முறையாக சேலம் எருமாபாளையம் பனங்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளோடும், தென்னை, வாழை மரங்களோடும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சேலம் அருகே சாலைமறியல்

சேலத்தில் இருந்து சென்னைக்கு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமை சாலை திட்டம் என்ற பெயரில் புதியதாக சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னைக்கு சுமார் 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த பசுமைச் சாலை திட்டத்திற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தநிலையில் இந்த புதிய சாலை அமைத்திட முதல் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் அரியானூர் பகுதியில் இருந்து துவங்கும் இந்த சாலை முழுவதும் விவசாய நிலங்களையும், கனிம வளம் மிக்க மலைகளையும் அழித்து அமைக்கப்படுவதாகவும், இந்த திட்டத்தினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் அவலநிலை உள்ளது என்றும் கூறி சேலம் எருமாபாளையம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும், மனு குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் இன்று காலை எருமாபாளையம் மற்றும் பனங்காடு பகுதியில் உள்ள விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பனங்காட்டை சேர்ந்த லோகேஸ் கூறுகையில், ''சேலம் டூ சென்னைக்கு சாலை வழி, ரயில் வழி, விமான வழி என பல வழிகள் இருக்கும் நிலையில் 8 வழி சாலை தேவையற்றது. இந்த 8 வழி பசுமைச் சாலை திட்டம் என்பது மக்களுக்கானது அல்ல. கார்ப்பரேட் நிறுவனத்திற்கானது. கஞ்சமலை, கல்வராயன் மலை, தீர்த்தமலை, ஜவ்வாது மலை என பல மலைக்களை அழித்து இயற்கை வளங்களை சூரையாடி ரோடு அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தால் எங்கள் விளை நிலங்கள் பறி போவதோடு, குடியிருப்பு பகுதிகளும், இயற்கை வளங்களும் பறிபோகும் நிலை இருக்கிறது. இந்த திட்டம் தேவையற்றது. இதனால் பெரும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து தான் இன்று சாலை மறியல் செய்து வருகிறோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க