'ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர் விநியோகத்தை நிறுத்துங்கள்!’ - கொந்தளிக்கும் விவசாய அமைப்பு | Stop water supply to Sterlite industry in thoothukudi, urges farmers association

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (29/04/2018)

கடைசி தொடர்பு:20:00 (29/04/2018)

'ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர் விநியோகத்தை நிறுத்துங்கள்!’ - கொந்தளிக்கும் விவசாய அமைப்பு

"ஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் விநியோகம் செய்யப்பட்டு வரும் 1 கோடியே 35 லட்சம் லிட்டர்  தண்ணீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஸ்ரீவைகுண்டம் அணை முன்பு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சண்முகம் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," மத்திய அரசின் ரிசர்வ் வங்கி, விவசாயிகளின் பயிர்க் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதனால் சிறு, குறு விவசாயிகள்  கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்த இருக்கிறோம்.

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தினால், இருக்கிற மரக்களையெல்லாம் அழித்து விட்டு எப்படி பசுமைச் சாலைகள் அமைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும், இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போதிலும், கர்நாடக மாநிலத் தேர்தலை கருத்தில் கொண்டு வாரியம் அமைக்காமலும், தமிழகத்தின் உணர்வினைப் புரிந்து கொள்ளாமல் தீர்ப்பினை அவமதித்த மத்திய அரசினைக் கண்டித்து வரும் மே 3-ல், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

நிலம், நீர், காற்றினை மாசுபடுத்தியதுடன், மக்களுக்கும் பல்வேறு  பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ஸ்டெலைட் ஆலையின் புதுப்பித்தல் மனு ரத்து  செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் இந்த ஆலைக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நாள் ஒன்றுக்கு 1 கோடியே 35 லட்சம் லிட்டர் தண்ணீர் தாமிரபரணியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கான தண்ணீர் விநியோகம் உடனடியாக துண்டிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் வரும் மே-10 ம் தேதி, ஸ்ரீவைகுண்டம் அணை முன்பு விவசாயிகளைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். தமிழக மின் நிலையங்களில் மின்  உற்பத்தில் மிகையாக உள்ள மின்சாரத்தை ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்ப, விவசாயிகளின் விளை நிலங்களில், அவர்களின் அனுமதி பெறாமலே உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை கண்டித்து, உயர்மின் கோபுர எதிர்ப்பு மாநாடு ஒன்று நடத்தி விவசாயிகளின் எதிர்ப்பினை அரசுக்கு தெரியப்படுத்த உள்ளோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க