வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (29/04/2018)

கடைசி தொடர்பு:20:16 (29/04/2018)

" 'பாலில் கலப்படம்' என மீண்டும் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை!"

" 'பாலில் கலப்படம் நடக்கிறது' என்று வதந்திகளை மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வதந்தி பரப்புவதை உடனே நிறுத்த வேண்டும்" என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து,அவரிடம் பேசினோம். "நாம் தினமும் காலை எழுந்ததும் அருந்துகின்ற; குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் எனப் பலருக்கும் எளிதாக ஜீரணமாகும் உணவுப் பொருளாக; உயிரைக் காக்கும் அத்தியாவசிய பொருளாக விளங்குவது பால்தான். மனிதன் பிறப்பில் தொடங்கி இறப்பிற்குப் பின்னரும் ஒரு பொருள் தேவைப்படுகிறதென்றால் அதுவும் பால் மட்டுமே. அதுமட்டுமின்றி,தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போன சூழ்நிலையில்,இன்று விவசாயிகளுக்கு ஓரளவிற்கேனும் அரை வயிறு கஞ்சியாவது கிடைக்கின்ற நிலை இருக்கின்றதென்றால்,அது பாலினால் கிடைக்கின்ற வருமானம் என்றால் மிகையில்லை. மேலும்,உலகளவில் உற்பத்தியில் முதலிடம் பிடித்து, தன்னிறைவோடு ஒருதுறை இந்தியாவில் இருக்கிறதென்றால் அது பால்வளம் மட்டுமே. அதனால் தான், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் கூட நமது இந்திய பால்வளத்தை குறி வைத்துப் படையெடுத்து வருகின்றன. அப்படி நமது தேசத்தின் பிரிக்க முடியாத, பெருமைமிக்க சேவை சார்ந்த தொழிலாக விளங்கி, பல்வேறு வகையில் சிறப்பான இடத்தைப் பிடித்து உயிர் காக்கும் பொருளாக விளங்கி வரும் பால் குறித்து மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறு கருத்துகள் மிகுந்த வேதனையளிக்கிறது. 

பாலில் கலப்படம்

ஏனெனில்,'இந்தியாவில் மாடுகளே இல்லாத சூழ்நிலையில் அதிகளவில் பால் உற்பத்தி என்பது எப்படி சாத்தியம்? நாம் அருந்தும் பால் அனைத்தும் சோயா பவுடர்,  யூரியா கலந்த பால் தானே தவிர உண்மையான பால் அல்ல', 'நாம் அருந்தும் பால் பாலே கிடையாது' எனவும்,'அரை லிட்டர் பாலில், அரை லிட்டர் யூரியா, 9 லிட்டர் தண்ணீர் சேர்த்தால்,10 லிட்டர் பால் தயார்' எனவும்,'இவ்வாறான பால் தான் தற்போது விற்பனை செய்யப்படுகிறது' எனவும் கடந்த ஆண்டு பரப்பப்பட்ட அதே தகவல் சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் ஒரு சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. மேற்கண்ட,தகவல் உண்மை தானா?, 'நாங்கள் பாலினை தைரியமாக அருந்தலாமா?', 'குழந்தைகளுக்கு பாக்கெட் பாலினை கொடுக்கலாமா?' 'உண்மையில் பால் உற்பத்தி இந்தியாவில் தாராளமாக நடைபெறுகிறதா?' என பொதுமக்கள் தொலைப்பேசி வாயிலாக எங்களைத் தொடர்பு கொண்டு கேள்விக்கணைகளை வீசி வருகின்றனர். அவர்களுக்கு உண்மை நிலவரத்தைக் கூறி புரிய வைப்பதற்குள் எங்களுக்கு சிரமமாகி விடுகிறது. 

ஏற்கெனவே,கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,'தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்குத் தீங்கிழைக்கும் ரசாயனங்களைக் கலப்படம் செய்வதாகவும், தனியார் பால் நிறுவனங்களின் பாலினை அருந்துவதால் புற்றுநோய் வருவதாகவும்','ஆவின்' நிறுவனத்தின் விழாவில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தினார். அவர் அவ்வாறு பேசி ஓராண்டு முடியும் தருவாயிலும் தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்குத் தீங்கிழைக்கும் ரசாயனங்களைக் கலப்படம் செய்வதாக அவரால் உறுதி செய்ய முடியவில்லை. ஏனெனில்,பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியது போல்,தமிழகத்தில் பாலில் கலப்படம் நடந்தால் தானே அதை நிரூபிக்க முடியும்?. எனவே, அமைச்சர் கூறியது போல் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டி, உண்மையில் தமிழகத்தில் நடப்பது என்ன? என்கிற விவரங்களைச் சேகரிக்கும் பணியில் எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடந்த ஓராண்டாக ஈடுபட்டு வருகிறது. ஏனெனில்,மக்களுக்குத் தரமான பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், பால் முகவர்கள் தரமான பாலினை மட்டுமே மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில் தொடர்ந்து மேற்கண்ட நடவடிக்கைகளை எங்களது சங்கம் அமைதியாகச் செய்து கொண்டிருக்கிறது.

எனவே,பால் தொடர்பான தவறான தகவல்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்புவோர் குறித்து எங்களது சங்கத்தின் தகவல் தொழில்நுட்ப குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவ்வாறு தவறான தகவல்களைப் பரப்புவோர் குறித்த தகவல்களை, அவர்களின் பதிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்துத் தகுந்த ஆதாரங்களோடு காவல்துறையில் புகார் அளித்து அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க எங்களது சங்கத்தின் தலைமை சட்ட ஆலோசகர் தனசேகர் தலைமையிலான வழக்கறிஞர் குழு எப்போதும் தயாராக இருந்து வருகிறது. எனவே,பால் குறித்து தவறான தகவல்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரப்புவதை, பகிர்வதை எவராக இருந்தாலும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில்,பாலில் கலப்படம் தொடர்பாகத் தகுந்த ஆதாரங்கள் இன்றி தொடர்ந்து வதந்திகளைப் பரப்புவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எங்களது சங்கத்தின் சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார் உறுதியாக. 


டிரெண்டிங் @ விகடன்