'மூன்றாவது அணி குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லையே!' - சந்திரசேகர ராவ் காட்டம் | Telangana CM Chandrashekar speaks about third frond

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (29/04/2018)

கடைசி தொடர்பு:19:00 (29/04/2018)

'மூன்றாவது அணி குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லையே!' - சந்திரசேகர ராவ் காட்டம்

மூன்றாவது அணி குறித்து எந்த இடத்திலும் நாங்கள் அறிவிக்கவில்லையே என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

மூன்றாவது அணி குறித்து எந்த இடத்திலும் நாங்கள் அறிவிக்கவில்லையே என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

சந்திரசேகர ராவ்

சென்னை வந்த சந்திரசேகர ராவ், தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அதன்பின்னர், தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்த அவர், ஸ்டாலின்  இல்லத்தில் மதிய உணவு அருந்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ''தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவர் (சந்திரசேகர ராவ்) விசாரித்தர். அதன்பின்னர் என்னுடைய வீட்டிற்கு வந்த அவரிடம், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், எதிர்வரும் காலத்தில் அரசியலை எப்படி நாம் அணுக வேண்டும் என்பது குறித்தும் நீண்ட நேரம் விவாதித்தோம். முக்கியமாக மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது, மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுப்பது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலங்களுக்குக் கூடுதல் நிதியைப் பெறுவது, மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கினைப் பற்றியும் விவாதித்தோம். ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இது முதல்கட்ட பேச்சுவார்த்தையாகத் தொடங்கியிருந்தாலும், இதுகுறித்து அவ்வப்போது ஆலோசிக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.

அவரும் மற்ற மாநில முதலமைச்சர்களோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். எங்களோடு ஒத்தகருத்து கொண்ட கட்சிகள் தமிழகத்தில் இருக்கின்றன. அவர் பேசியது குறித்து அந்த கட்சித் தலைவர்களோடு நான் விவாதிக்க இருக்கிறேன். மேலும், தி.மு.கவின் பொதுக்குழு, செயற்குழு, நிர்வாகக் குழு, உயர்நிலைக் குழு போன்ற பல்வேறு குழுக்களோடு இதுகுறித்து பேசிவிட்டு உங்களோடு தொடர்ந்து பேசுவேன் என்று அவரிடத்தில் நான் சொல்லியிருக்கிறேன். அதேபோல், மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை நடத்தவும் அவரிடத்தில் கூறியிருக்கிறேன். அதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கலாம் என அவர் சொல்லியிருக்கிறார். தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம்’’ என்றார். 

அதன்பின்னர் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், 'இன்று எனது சகோதரர் ஸ்டாலினைச் சந்திக்க நான் வந்துள்ளேன். நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். மத்திய - மாநில அரசு உறவு, மாநில உரிமை உள்ளிட்டவைகள் அதில் இடம்பெற்றிருந்தன. இது தொடக்கமும் அல்ல; முடிவும் அல்ல. என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.

நிர்வாகம் மற்றும் அரசியலில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற விவாதம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடமும் போனில் பேசியிருக்கிறோம். விரைவில் மேலும் சில தலைவர்களோடு பேச இருக்கிறோம். ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்ற தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் நிறுவன நாளில் நான் கூறியது போலவே, எந்த ஒரு முடிவுக்கும் வர குறைந்தது 3 மாதஙகளாவது ஆகும். நம் நாடு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதில் நானும், ஸ்டாலினும் உறுதியோடு இருக்கிறோம். இதில் மாற்றுக்கருத்தில்லை. தெலங்கானா அரசு சார்பில் மே 10-ம் தேதி நடைபெறும் விவசாயிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். அவர் எனது அழைப்பை ஏற்றுக்கொண்டார். எங்களது நட்பு தொடரும்’’ என்றார். 

மூன்றாவது அணி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்குப் பதிலளித்த சந்திரசேகர ராவ், ''நாங்கள் 3வது, 4வது அல்லது 5வது அணியை உருவாக்கப் போவதாகக் கூறவில்லை. 3-வது அணி என்ற பேச்சு ஊடகங்களால் உருவாக்கப்பட்டது. மூன்றாவது அணியை உருவாக்கப் போவதாக எந்த இடத்திலும் நாங்கள் அறிவிக்கவில்லை. நாட்டின் தற்போதைய சூழல் குறித்து ஆலோசனை மட்டுமே செய்துள்ளோம். பல்வேறு தரப்பினர் குறித்தும் பேசியுள்ளோம். அடுத்து என்ன செய்ய வேண்டும்; செய்யக் கூடாது என்பது குறித்து அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் முடிவுக்கு வருவோம்’’ என்றார்.