வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (30/04/2018)

கடைசி தொடர்பு:01:00 (30/04/2018)

கடலில் தத்தளித்த 3 பெண்கள் - உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய 65 வயது முதியவர்!

கடலில் சிக்கி உயிருக்குப் போராடிய 3 பெண்களைத்  தனி ஒரு ஆளாகச் சென்று 65 வயது முதியவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழவைத்துள்ளது.  

கடலில் சிக்கி உயிருக்குப் போராடிய 3 பெண்களைத்  தனி ஒரு ஆளாகச் சென்று 65 வயது முதியவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழவைத்துள்ளது.  

முதியவர் கருப்பையா

மதுரை வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், பஞ்சவர்ணம் குடும்பத்தினர் ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா சென்றுவிட்டு ஏர்வாடி தர்காவிற்கு வந்துள்ளனர். தர்காவிற்கு சென்றுவிட்டு அருகில் உள்ள சின்ன ஏர்வாடி கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். சின்ன ஏர்வாடி கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த துளசி என்பவரை திடீரென எழுந்த கடல் அலை இழுத்துச் சென்றது. இதனைக் கண்ட  அப்பகுதியைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணும், துளசியின் உறவினரான அபிநயா என்ற பெண்ணும் அவரைக் காப்பாற்ற கடலில் இறங்கியுள்ளனர். காப்பாற்றச் சென்ற இவர்கள் இருவரும் கடல் அலையில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து கடல் அலையில் சிக்கி தவித்த 3 பெண்களும் தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர்.

இதனைக் கேட்ட அந்த வழியே வந்த கருப்பையா என்ற 65 வயது முதியவர் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்குள் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பெண்களையும் சமயோசிதமாக காப்பாற்றிக் கரை சேர்த்தார். உயிர் தப்பிய 3 பெண்கள் மற்றும் அவர்களைக் காப்பாற்றிய கருப்பையா ஆகியோருக்குக் கடல் நீரைக் குடித்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நால்வருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ராமநாதபுரம் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முதியவர் கருப்பையா சின்ன ஏர்வாடி பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக இருந்து வருகிறார். முதிர்ந்த வயதில் தனது உயிரினை பொருட்படுத்தாது கடலில் குதித்து 3 பெண்களைக் காப்பாற்றிய அவருக்கு உயிர் பிழைத்த குடும்பத்தினர் சன்மானம் கொடுக்க முன்வந்தனர். ஆனால் இதனை ஏற்கக் கருப்பையா மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அந்தக் குடும்பத்தினர் கருப்பையாவுக்கு கண்ணீருடன் நன்றி கூறினர்.