'நண்பராக இருந்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டார்' - மோடியைச் சாடும் வைகோ! | vaiko slams pm modi in cauvery issue

வெளியிடப்பட்ட நேரம்: 03:50 (30/04/2018)

கடைசி தொடர்பு:07:10 (30/04/2018)

'நண்பராக இருந்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டார்' - மோடியைச் சாடும் வைகோ!

எத்தனையோ பிரதமர்களை எதிர்த்திருக்கிறேன், ஆனால் மோடி நண்பராக இருந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டார் என வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி காவிரி பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க பொதுச்செயலாளருமான வைகோ செங்கிப்பட்டியில் அறப்போர் பிரச்சார பயணத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். அப்போது,  ''காவிரி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. இது தொடர்பாக 100 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடைபெறுகிறது. அதிக வெள்ளம் வரும் காலத்தில் தமிழகத்தை வடிகாலாகக் கர்நாடக அரசுக் கருதி வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் 138 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கி வைப்பதற்காகப் புதிதாக அணைக் கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. நடுவர் மன்றத் தீர்ப்பு என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது. இதை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதே முரணானது. இதில் நீதிபதி தீபக் மிஸ்ரா சட்டத்துக்குப் புறம்பாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து சொல்லப்படவில்லை. மோசடி செய்யும் விதமாகச் செயல் திட்டம் என்ற வார்த்தைக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எப்படி வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தில் மாற்ற முடியும். எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் மட்டுமே தமிழகத்தின் உரிமைப் பாதுகாக்கப்படும். இல்லாவிட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும். மத்திய அரசும், நீதிமன்றமும் ஒன்றாக இணைந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்து விட்டது. ஒரு போதும் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்காது. நான் எத்தனையோ பிரதமர்களை எதிர்த்துள்ளேன். ஆனால் மோடி நண்பராக இருந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டார். தஞ்சை, நாகை, திருவாருர் மாவட்டங்களில் 12 நாட்கள் பயணம் செய்து மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த உள்ளோம். இதில், ம.தி.மு.க கட்சிக் கொடியைப் பயன்படுத்தமாட்டோம். மூவேந்தர்களுடைய மீன், வில் அம்பு, புலிக் கொடிகளை மட்டும் பயன்படுத்துவோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close