பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

மதுரை வைகை ஆற்றுக்குள் நள்ளிரவு முதல்கடல்போல் திரண்டிருந்த மக்களுக்கு மத்தியில், எதிர்சேவைகளுக்குப் பிறகு, காலை 6 மணி அள‌வில்‌ வைகை ஆற்றிற்கு வருகை‌ புரிந்த சுந்தர்ராஜ பெருமாளான கள்ளழகர், பச்சைப் பட்டுடுத்தி‌ ஆற்றில் இறங்கினார். 

கள்ளழகர்

சித்திரைத் திருவிழா, கடந்த 18-ம் தேதி முதல் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், தேரோட்டமும் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், சித்திரைத் திருவிழாவை இன்னும் சிறப்பாக ஆக்கும் வகையில் சுந்தரராஜப்பெருமாளான கள்ளழகர், கடந்த 28-ம் தேதி அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி ஆர்ப்பாட்டமாகக் கிளம்பினார். வரும் வழியில் நானூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி, நேற்று மாலை மதுரை வந்துசேர்ந்தார்.

தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளியவர், இரவு முழுவதும் மக்களுக்கு ஆசி வழங்கி, பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு இன்று அதிகாலை மூன்று மணிக்குத் தங்கக்குதிரையில் ஏறி 5 மணிக்கு வைகை ஆற்றுக்கு வந்துசேர்ந்தார். ஆற்றுக்கு வந்த கள்ளழகரை வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். அதன் பின்பு,  6 மணியளவில் பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகையில் இறங்கினார். இந்த அரிய காட்சியைப் பார்க்க அங்குத் திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் அவர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, பூக்களைத் தூவி பரவசமடைந்தனர். அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், கலெக்டர் வீரராகவ ராவ், காவல்துறை கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் குடும்பத்துடன் வருகைதந்தனர். இதற்காக, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்தவிடப்பட்டது. கள்ளழகரைக் காண தமிழகம் மட்டுமில்லாமல், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!