வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (30/04/2018)

கடைசி தொடர்பு:09:30 (30/04/2018)

கண்ணகி கோயிலுக்குப் படையெடுக்கும் பக்தர்கள் −கடும் சோதனைக்குப் பின்னரே அனுமதி!

கண்ணகி கோயில்

பிரபலமான கண்ணகி கோயில் திருவிழா, வருடா வருடம் சித்திரை மாதம் முழு நிலவு அன்று நடைபெறும். இத்திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறையும், மாவட்ட காவல்துறையும், நக்சல் தடுப்பு பிரிவு காவலர்களும் செய்திருக்கிறார்கள். தீ தடுப்புப் பிரிவு ஊழியர்கள் நூறு பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கண்ணகி கோயிலுக்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, கேரள மாநிலம் குமுளி வழியாக 12 கிலோ மீட்டர் தூரம்கொண்ட பாதையில் செல்லலாம். இந்தப் பாதையில் ஜீப் அனுமதிக்கப்படுகிறது.

கண்ணகி கோயில் மலைபாதை

கேரள வனத்துக்குள் இந்தப் பாதை உள்ளதால், வருடம்தோறும் தமிழக பக்தர்கள்மீது கடுமையான கெடுபிடிகளைச் செலுத்திவருகிறது கேரள வனத்துறை. மற்றொரு பாதை, தமிழக வனப்பகுதியான பளியன்குடி வழியாக 6.6 கிலோமீட்டர் தூர மலைப்பாதை. இந்தப் பாதை வழியாக நடந்து கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால், மாவட்ட வனத்துறை, காவல்துறை சார்பாக பக்தர்களைச் சோதனைசெய்ய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால்,  ஐந்து லிட்டர் தண்ணீர் பாட்டில் மட்டுமே அனுமதி, பிளாஸ்டிக் பொருள்களுக்கு அனுமதி இல்லை. அதேநேரம், பக்தர்கள் கொண்டுவரும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது அவற்றை வாங்கிக்கொள்ளலாம். பெண் பக்தர்களை சோதனைசெய்ய பெண் காவலர்கள் இல்லை. பளியன்குடி வழியாகச் செல்லும் பாதையை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தொடங்கிவைத்தார். மாலை 4மணி வரை மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்.