வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (30/04/2018)

கடைசி தொடர்பு:11:00 (30/04/2018)

'கடைசி கிராமமும் மின்வசதி பெற்றது'- அரசு பெருமிதம்

நாட்டின் கடைசி கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

'கடைசி கிராமமும் மின்வசதி பெற்றது'- அரசு பெருமிதம்

நாட்டின் கடைசி கிராமமும் மின்வசதி பெற்றுள்ளதாக, மத்திய அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. 

மின்சாரம் பெற்ற கடைசி கிராமம்

மணிப்பூர் சேனாபதி மாவட்டத்தில், லெய்சங் என்ற கிராமம்தான் கடைசி மின்வசதி பெற்ற கிராமம். இங்கு, 19 குடும்பங்களே வசிக்கின்றன. இதற்கு முந்தைய ஆட்சியின் போது, நாட்டில் உள்ள 5.77 லட்ச கிராமங்களுக்கு மின் இணைப்பு வசதி அளிக்கப்பட்டிருந்தது. பாரதிய ஜனதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், தீனதயாள் உபாத்யா கிராம ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ், மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்க 76,000 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது.

கடைசி கிராமத்துக்கும் மின்சாரம்

இந்தத் திட்டத்தின் கீழ், 18,452 கிராமங்களுக்கு மின் வசதி அளிக்கப்பட்டது. மேலும், 1,275 சிறு கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது,  நாட்டில் 5,97,000 கிராமங்களும் மின்வசதிபெற்றுள்ளன. இந்தியாவில், மொத்தம் 17.99 கோடி கிராமப்புற வீடுகள் உள்ளன. அதில், 3.44 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை என்பதையும் கவனதில்கொள்ள வேண்டும். 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள், மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மின்சாரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் இணைப்பு வழங்க ஊழியர்கள் நடத்திய பேராட்டம்

லெய்சங் கிராமத்தில் மின் இணைப்பு கொடுக்க, ஊழியர்கள் கடும் போராட்டம் நடத்தவேண்டி இருந்தது. மலை கிராமமான இங்கு ஓடைகள், நதிகள் போன்றவற்றைக் கடந்தே கனம் மிகுந்த இரும்புக் குழாய்கள், ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகியவற்றைக் கொண்டுசெல்ல முடிந்தது. சில நேரங்களில், ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது. கடினமான சவால்களைக் கடந்து, இத்தகைய பணிகளை மேற்கொண்ட ஊழியர்களுக்குத் தன் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க