உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்... உங்களுக்கும் வந்ததா வாட்ஸ்அப் செய்தி?

மோட்டார் வாகன விபத்தின்போது இன்ஷூரன்ஸ் தொகை பெறுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 11 கடுமையான விதிமுறைகளை வகுத்துத் தீர்ப்பளித்திருப்பதாகவும், அத்தீர்ப்பு, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் செய்தி உண்மையா?

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலைவிட அதிகமான இறப்பு இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளால் நிகழ்கின்றன. தினமும் 1.5 லட்சம் படுகாயங்கள், 400 இறப்புகளும் ஏற்படுத்தும் இந்த சாலை விபத்து உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்தது.  விபத்துகளை 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக குறைத்துவிடுவதாக 2014-ம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இந்திய அரசு உறுதியேற்றது. அதன் தொடர்ச்சியாக மோட்டார் வாகனச் சட்டம் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த மசோதாவில் சில விதிமுறைகள், மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாக இருந்ததால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அதில் மாற்றம் கொண்டுவரச் சொன்னது. மாற்றமும் நடக்கவில்லை. இன்னமும் அது சட்டம் ஆகவில்லை.

மோட்டார் வாகன சட்டம்


இந்நிலையில், மோட்டார் வாகன விபத்தின்போது இன்ஷூரன்ஸ் தொகை பெறுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் 11 கடுமையான விதிமுறைகளை வகுத்துத் தீர்ப்பளித்திருப்பதாகவும், அத்தீர்ப்பு, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. அத்தகவலில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளில் சில நடைமுறைக்கு ஒத்துவராதது போல இருந்தன. குறிப்பாக, தவறான திசையில் வாகனம் ஓட்டினால் ஏற்படும் உயிரிழப்புக்கு ஈடாக 20 லட்சம் ரூபாய் அபராதம் தரவேண்டும் என்றும், தரத்தவறினால் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்றும், அவரது ரத்த உறவுகளின் ஓட்டுநர் உரிமமும் 7 ஆண்டுகள் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விபத்துக்காப்பீடு இன்ஷூரன்ஸ் துறையின் சட்டவல்லுநர்கள் சிலரிடம் பேசினோம்.

மோட்டார் வாகன சட்டம்''முதலில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை அதன் உண்மைத்தன்மை அறியாமல் பரப்புவது தவறு என்பதை நாம் உணர வேண்டும். அப்படிச்செய்தாலே பல்வேறு குழப்பங்களைத் தவிர்க்கலாம். தற்போது இருக்கும் மோட்டார் வாகனச்சட்டம் 1988-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அக்காலகட்டத்தில் இந்தியாவில் மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பெருக்கமும் இல்லை, விபத்துகளும் அதிகமில்லை. எனவே, சட்ட விதிமுறைகள் அக்காலகட்டத்துக்கேற்ப எளிமையாக இருந்தன. ஆனால், வாகனங்கள் அதிகரிக்க அதிகரிக்க, காலத்துக்கேற்ப சில திருத்தங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டன. மோட்டார் வாகன இழப்பீட்டுத் தீர்ப்பாயச் சட்டம் என்பதைப் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கான சட்டம் என்பார்கள். அதன்பிறகு இச்சட்டத்தில் சிறுசிறு திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது காப்பீட்டு நிறுவனங்கள், நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்குகின்றன.


தவறான திசையில் வாகனம் ஓட்டி ஏற்படும் உயிரிழப்புக்கு ஈடாக 20 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்பதெல்லாம் கற்பனை செய்யமுடியாததாக இருக்கிறது. கவனக்குறைவால் நடக்கும் விபத்துக்கான இத்தண்டனையை பெருங்குற்றஞ்செய்த குற்றவாளிகளுக்குக்கூட அவ்வளவு எளிதில் எதிர்பார்க்க முடியாது. தண்டனைகள், தவறை உணர வைப்பதற்காகத்தானே ஒழிய, இத்தண்டனையிலிருந்து எப்படித் தப்பிப்பது எனச் சிந்திக்க வைப்பதாக இருக்கக்கூடாது. மனிதனைத் திருத்தும் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர அச்சுறுத்தும் கொள்கையாக இருக்கக்கூடாது.
ஆட்டோவைப் பொறுத்தவரை, தற்போதும்கூட, மூன்று பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநருடன் சேர்ந்து நான்கு பேர் பயணித்தால் மட்டுமே ஏதேனும் விபத்து நேர்ந்தால் இன்ஷூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வழங்கும். மற்ற பயணிகளுக்கு வாகன உரிமையாளர்தான் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கியவர்களுக்கான காப்பீட்டுத்தொகையை நிறுத்திவைப்பது குறித்து சில நீதிமன்றங்கள் ஏற்கெனவே கண்டிப்போடு தீர்ப்பு வழங்கியிருக்கின்றன.

அடுத்ததாக, சாலையில் தவறான திசையில் பயணித்து விபத்தில் சிக்குபவர்களுக்கு அவர்களின் அலட்சியமான பயணத்தைக் காரணம் காட்டி காப்பீட்டுத் தொகையில் 50% இழப்பீடு குறைக்கப்பட்ட தீர்ப்புகள் உண்டு. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது நிரூபிக்கப்பட்டால் இன்ஷூரன்ஸ் நிறுவனமானது இழப்பீடு வழங்க மறுக்கும் நடைமுறை தற்போதும் வழக்கத்தில் இருக்கிறது. வாகன உரிமையாளர்தான் இதற்கான இழப்பீடு தரவேண்டியிருக்கும்" என்கிறார் சட்டவல்லுநர் சுரேஷ்.

மோட்டார் வாகன சட்டம்மோட்டார் வாகனச் சட்டத்தில் நீண்ட அனுபவம் கொண்ட வழக்கறிஞர் யுவராஜ், ''உங்களுக்கு இப்போது வந்திருக்கும் இந்த செய்தி எனக்கு ஒரு மாதத்துக்கு முன்பு வந்தது. இதில் இருக்கும் பல தகவல்கள் திரிக்கப்பட்டது.  இதுபோன்ற உத்தரவுகளைப் பல வழக்குகளில் நீதிமன்றம் கொடுத்துள்ளது. ஆனால், அவை எதுவும் சட்டமாக்கப்படவில்லை. பைக்கில் மூன்றுபேர் பயணிக்கும்போது விபத்து நடந்தால் 3 பேர் அந்த பைக்கில் இருந்ததால்தான் பைக் தடுமாறி விபத்து ஏற்பட்டது என்று நிரூபித்தால் மட்டுமே இன்சூரன்ஸ் வழங்கப்படாது. அதேபோல் ஹெல்மெட் போடாமல் வந்து விபத்தில் மரணித்த வழக்குகளுக்கு நீதிமன்றம் இழப்பீடுகளை குறைப்பார்களே தவிர நிறுத்தமாட்டார்கள். 

இதில் இருக்கும் கடைசி 4 விதிகள் மத்திய அரசு கொண்டு வரும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் வரைவில் உள்ளது. ஆனால், 20 லட்சம் அபராதம் 7 ஆண்டு சிறை என்பதெல்லாம் சட்டமாக்கப்பட வாய்ப்பே இல்லை."

ஆக, உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்றுவரும் தகவல் முழுக்க முழுக்க கற்பனையாலும் யூகத்தாலும் உருவாக்கப்பட்ட செய்தியே. அதனால் குழப்பம் தேவையில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!