வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (30/04/2018)

கடைசி தொடர்பு:11:41 (30/04/2018)

கந்துவட்டிக் கொடுமையால் நெல்லை கலெக்டர் ஆபீஸில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற கூலித்தொழிலாளி!

வட்டிக்குப் பணம் கொடுப்பதாக தெரிவித்து ஏமாற்றி வெற்றுப் பத்திரத்தில் எழுதி வாங்கி கொண்டு கந்து வட்டி கேட்டு மிரட்டியதால், கூலித் தொழிலாளி ஒருவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வட்டிக்கு பணம் கொடுப்பதாகத் தெரிவித்து, வெற்றுப் பத்திரத்தில் ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டு, கந்துவட்டி கேட்டு மிரட்டியதால், கூலித் தொழிலாளி ஒருவர் தனது மகனுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கந்து வட்டி - தீக்குளிக்க முயற்சி

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜவேலு. கூலிவேலை செய்துவருகிறார். இவர், சொந்த காரணங்களுக்காக வாசுதேவநல்லூரைச் சேர்ந்த சண்முகசிகாமணி என்பவரிடம் 50,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்தக் கடனுக்காக, வட்டியுடன் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என சண்முகசிகாமணி தெரிவித்தார். இந்த நிலையில், ராஜவேலு தனது நிலத்தில் வீடு கட்டும் வேலையில் ஈடுபட்டார்.

அதற்குப் பணம் தேவைப்பட்டதால், சண்முகசிகாமணியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ஈடாக, தனது காலிமனையை அடமானமாக எழுதித் தருவதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, சண்முகசிகாமணி அந்த காலியிடத்தைத் தனது பெயருக்கு அடமானமாக எழுதிப் பெற்றுக்கொண்டார். அத்துடன், வெற்றுப் பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கிக்கொண்டார். அவர், பழைய பாக்கித் தொகையான ஒரு லட்சத்தைக் கழித்துக்கொண்டு, மேலும் இரண்டு லட்சம் ரூபாய் தருவதாகத் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக, ஏப்ரல் 20-ம் தேதி, கரிவலம் வந்தநல்லூர் சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அடமானப் பத்திரம் பதிவுசெய்யப்பட்டது. அத்துடன், காலி இடத்துக்கான பத்திரங்களையும் அவர் பெற்றுக்கொண்டார். ஆனால், ஒப்பந்தப்படி அவர் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இது தொடர்பாகப் பலமுறை சண்முகசிகாமணியிடம் கேட்டும் பணம் கொடுக்கவில்லை. அத்துடன், 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே காலி இடத்தைத் திரும்பக் கொடுப்பதாகத் தெரிவித்ததால், ராஜவேலு அதிர்ச்சியடைந்தார்.

பணம் கையில் கிடைக்காத நிலையில், தனது நிலத்துக்கான பத்திரம்  மற்றும் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டதால், கந்துவட்டி கேட்டு மிரட்டும் சண்முகசிகாமணி குறித்து போலீஸாரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அந்தப் பகுதியில் செல்வாக்குடன் வலம்வரும் சண்முகசிகாமணியால் மோசம் போனதை அறிந்த ராஜவேலு, இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவகத்துக்கு தனது 5 வயது மகன் அகிலேஸ்வரனுடன் வந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் கையில், வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி இருவரும் தீக்குளிக்க முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து, போலீஸ் வேனில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச்சென்றார்கள்.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் கந்துவட்டிக் கொடுமையால் கடந்த ஓராண்டுக்கு முன்னர் குடும்பத்துடன் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னர், ஆட்சியர் அலுவலக வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அனைவரையும் பலத்த சோதனைக்குப் பின்னரே போலீஸார் அனுமதித்தனர். இந்த நிலையில், ஆட்சியர் அலுவலக வாசலில் கூலித் தொழிலாளி ஒருவர் தனது மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கந்துவட்டிக் கொடுமையத் தீர்க்க, மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.