அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் ஆங்கர் ஐஸ்வர்யா

அமெரிக்காவில் தமிழர் பாரம்பரியக் கலைகளை வளர்க்க முயற்சி எடுப்பது குறித்து ஆங்கர் ஐஸ்வர்யா

ஆங்கரிங் பண்ணிக்கொண்டிருந்த ஐஸ்வர்யா, திருமணமாகி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் செட்டிலானது அனைவரும் அறிந்ததே. அங்கு சென்றதும் ஐஸ்வர்யாவின் நடை உடை, தோற்றம் மாறிப்போனது. உடற்பயிற்சி, யோகா போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொகுப்பாளினி ரம்யா, இங்கு ஃபிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டுவருவதுபோல, ஐஸ்வர்யாவும் வெளியிட்டுவந்தார். பாஸ்டன் நகரில் நடந்த 'மிஸஸ் சிட்டி' போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வென்றார். தற்போது, லேட்டஸ்ட்டாக தமிழ் பாரம்பர்யக் கலைகளை அங்கு வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஐஸ்வர்யா

இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது, ''சென்னைப் பொண்ணுங்க நான். உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும் தமிழ் மறக்குமா? சன் டி.வி-யில் இருந்தபோதே, தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு நடக்கும் ஸ்பெஷல் ஷூட்டிங்கிற்காக கிராமங்களுக்குப் போறதுனா, அந்த ஷோக்களைக் கேட்டு அடம் பிடிச்சுப் பண்ணுவேன். கிராமம், நம்ம மண்ணோட பழைய விஷயங்கள்னா எனக்கு அவ்வளவு பிரியம். அமெரிக்கா வந்த பிறகு, தமிழ்ல ஷோ பண்ண முடியுமான்னு ட்ரை பண்ணினேன். இப்போதைக்கு அதுக்கான வாய்ப்பு சரியா அமையலை. அதனால, வேற என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.

தலைமுறை தாண்டி இங்கு வாழும் தமிழர்களும், சில அமெரிக்கர்களுமேகூட தமிழ்நாட்டோட பாரம்பர்ய விஷயங்களைத் தெரிஞ்சுக்க அவ்வளவு ஆர்வமா இருக்கறது தெரியவந்தது. அவங்க மத்தியில, நம்மூர் கரகம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற விஷயங்களை எடுத்துட்டுப் போறதுக்கான முயற்சியைத் தொடங்கியிருக்கேன். என்னோட இந்த முயற்சிக்கு என் கணவர் ரொம்பவே பக்கபலமா இருக்கார். மதுரை முத்து இந்த விஷயத்துல எனக்கு வழிகாட்டி வர்றார். இந்தப் பாரம்பர்யக் கலைகள் பத்தி, இங்கிருந்து வெளிவர்ற உள்ளூர் தமிழ் மேகஸின்ல நானே கட்டுரை எழுதியிருக்கேன்னா பாருங்க. ஆமாங்க, எனக்கு இப்ப எழுத்தும் கைகூடத் தொடங்கி இருக்கு. ஒரு கலைக்கூடம் அமைச்சு, நம்மூர் நாட்டுப்புறக் கலைகளை அமெரிக்காவில் வளர்த்தெடுக்கறதுதான் என்னோட உடனடி அஜென்டா. கூடிய சீக்கிரத்துலயே அது நடக்கும்'' என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!