தொடர்ந்து முதல்வர் பதவியில் 25 ஆண்டுகள்! - ஜோதிபாசு சாதனையை முறியடித்த பவான்! | Pawan Chamling Becomes India's Longest-Serving Chief Minister

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (30/04/2018)

கடைசி தொடர்பு:13:00 (30/04/2018)

தொடர்ந்து முதல்வர் பதவியில் 25 ஆண்டுகள்! - ஜோதிபாசு சாதனையை முறியடித்த பவான்!

சிக்கிம் முதல்வர், எம்.ஜி.ஆர் போல கட்சி ஆரம்பித்த அடுத்த ஆண்டே ஆட்சியை பிடித்தவர். சிக்கிமை இயற்கை விவசாயத்துக்கு திரும்ப வைத்தவர்.

தொடர்ந்து முதல்வர் பதவியில் 25 ஆண்டுகள்! - ஜோதிபாசு சாதனையை முறியடித்த பவான்!

ந்தியாவில் ஆட்சிக்கட்டிலில் ஒரு முதல்வர் இருக்கிறார். பிற மாநிலத்தவர்கள் அவரை அறிந்திருப்பார்களா என்பதுகூட சந்தேகம்தான். சத்தமில்லாமல் தொடர்ந்து அவரும் முதல்வராக இருந்து 25-வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறார். சிக்கிம் முதல்வர் பவான் ஷாம்லிங் அந்த மகாத்தான சாதனையாளர். இதற்கு முன், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு 23 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்தது சாதனையாகக் கருதப்பட்டது.

சிக்கிம் முதல்வர் பவான் சாம்லிங்

நாட்டில் ஒவ்வொரு முதல்வரும் ஒவ்வொருவிதத்தில் பாப்புலராக இருப்பார்கள். யோகி ஆதித்யாநாத் சர்ச்சைக்குப் புகழ் பெற்றவர் என்றால் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடிக்குப் பெயர் போனவர். திரிபுரா முதல்வர் பிப்லப் தன் சர்ச்சைக்குரிய கருத்துகளால் நாட்டில் பிரபலமாகி வருகிறார். சிக்கிம் முதல்வர் பவான் ஷாம்லிங் அப்படியெல்லாம் எந்த வில்லங்கத்திலும் சிக்கிக்கொள்ள மாட்டார். 'தான் உண்டு தன் வேலை உண்டு' என்று இருப்பவர். 1993-ம் ஆண்டு சிக்கிம் ஜனநாயக முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து, அடுத்த ஆண்டே முதல்வர் பதவியில் அமர்ந்தார் பவான். அதற்குப் பிறகு தோல்வியையே பவான் சந்திக்கவில்லை. 

1973-ம் ஆண்டு 22 வயதில் அரசியலில் குதித்தார். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து வெளியேறி தனிக் கட்சி கண்டார். எம்.ஜி.ஆர். போல கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே ஆட்சியையும் பிடித்துச் சாதித்தார். தற்போது 'நியூ சிக்கிம்... ஹேப்பி சிக்கிம்' என்ற தாரக மந்திரத்தை முன் வைத்து ஆட்சியை நடத்தி வரும் பவான் ஷாம்லிங் கூறுகையில், ''என்னை 5 முறை தொடர்ந்து முதல்வர் பதவியில் அமர்த்தியுள்ள சிக்கிம் மக்களுக்கு நன்றி. தனிப்பட்ட முறையில் நான் சாதனை படைத்தாலும் மக்களுக்காக உழைப்பதையே என்றும் விரும்புகிறேன். என் மனதைக் கவர்ந்த தலைவர்களில் ஜோதிபாசுவும் ஒருவர். அவரின் சாதனையை நான் தாண்டியிருப்பது அதிர்ஷ்டத்தால் நடந்த நிகழ்வாகவே பார்க்கிறேன் '' என்று பணிவுடன் கூறுகிறார். 

தற்போது பவான் ஷாம்லிங்க்குக்கு 68 வயதாகிறது. நாட்டில் முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் நடைபெறும் மாநிலம் சிக்கிம். பவான் ஷாம்லிங்கின் இமாலய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க