வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (30/04/2018)

கடைசி தொடர்பு:14:00 (30/04/2018)

வீடு புகுந்து சிறுமியைக் கடத்திய இளைஞருக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனை!

நெல்லையில் 7 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்தி வன்கொடுமைக்கு முயற்சித்த இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸார் காலதாமதம் செய்ததால் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லையில், 7 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்தி, வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அந்த நபர்மீது வழக்குப் பதிவுசெய்ய போலீஸார் காலதாமதம் செய்ததால், பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமி கடத்தல் - குற்றவாளி

நெல்லையை அடுத்த மேலப்பாளையம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்தவர், கருப்பசாமி. இவர், லோடு ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார். இன்று அதிகாலை 3 மணிக்கு, பாளையங்கோட்டையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ஜஸ்டின் என்பவர், கருப்பசாமி வீட்டுக்குள் புகுந்து, 7 வயது சிறுமியை பலவந்தமாகத் தூக்கிச் சென்றுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி விழித்துக் கொண்டு அலறியதும், வாயைப் பொத்தி ஊருக்கு வெளியே தூக்கிச்சென்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும் அதிர்ந்த அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த த.மு.மு.க இளைஞர்கள், அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, முள் புதருக்குள் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதைக் கண்டு அதிர்ந்தனர். 

அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் ஜஸ்டின் என்பதும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. அவரைப் பிடித்து கம்பத்தில் கட்டிவைத்ததுடன், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர், இது தொடர்பாக அக்கறை காட்டாமல் இருந்ததோடு, குற்றவாளியைக் கைது செய்யவோ, அவர்மீது வழக்குப்பதிவு செய்யவோ இல்லை. 

உறவினர்கள் முற்றுகை

அத்துடன், சிறுமியை மருத்துவச் சோதனைக்கு அனுப்பவும் முயற்சி மேற்கொள்ளவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்களும் சிறுமியின் உறவினர்களும், அப்பகுதியைச் சேர்ந்த சமூக நல அமைப்பினரின் ஒத்துழைப்புடன், அனைத்து மகளிர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்த ஜஸ்டினைக் கைதுசெய்த போலீஸார், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.