''மன்னார்குடியில் நடப்பது நாடகம்..!"  - திவாகரன் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி | Edappadi rejects Divakaran's plea, feels its just another stunt from Mannargudi

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (30/04/2018)

கடைசி தொடர்பு:13:31 (30/04/2018)

''மன்னார்குடியில் நடப்பது நாடகம்..!"  - திவாகரன் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி

' இது மன்னார்குடியின் குடும்ப நாடகம் என சந்தேகப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், ' இவர்கள் இருவரும் காணாமல் போவார்கள்' எனப் பேட்டியளித்தார்' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக வட்டாரத்தில். 

''மன்னார்குடியில் நடப்பது நாடகம்..!

எடப்பாடி பழனிசாமி

தினகரனுக்கு எதிராக 'அம்மா அணி' என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார் திவாகரன். ' இது மன்னார்குடியின் குடும்ப நாடகம் என சந்தேகப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், ' இவர்கள் இருவரும் காணாமல் போவார்கள்' எனப் பேட்டியளித்தார்' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக வட்டாரத்தில். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நேற்று புதிய கட்சியின் தொடக்கவிழாவை நடத்தினார் திவாகரன். அம்மா அணியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய திவாகரன், ' இளைஞர்களை இணைத்துக் கொண்டு அறிவியல்பூர்வமாக சிந்தித்துச் செயல்படும் அமைப்பாக இது இருக்கும். சென்னையிலும் தலைமை அலுவலகம் ஒன்று திறக்கப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கையின்படி சசிகலா வழிகாட்டுதலுடன் இந்த அமைப்பு செயல்படும். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழுப் பங்கு உண்டு. தினகரனின் செயல்பாடுகள் அனைத்தும் பொய், புரட்டுகளாக உள்ளன. சட்டசபை என்பது கோயிலைப் போன்றது. அங்கு பொய் பேசாமல் தனித்துவமாக செயல்படுங்கள் என்று ஆலோசனை வழங்கினேன். அதை தினகரன் ஏற்கவில்லை. குடும்ப அரசியல் கூடாது என்கிறார். குடும்பம் இல்லாமல் அவர் எங்கிருந்து வந்தார்? சசிகலாவின் அக்கா மகன் என்பதாலேயே அவருக்கு எம்.பி. பதவி கிடைத்தது. பின்னர் சில காலம் அரசியலில் இருந்தே காணாமல் போய்விட்டார்" என விமர்சித்தார். இதற்குப் பதில் கொடுத்த தினகரன், ''திவாகரன் உடல்நலமில்லாமல் இருக்கிறார் என நினைத்தேன். இப்போது அவருக்கு மனநலமும் பாதிக்கப்பட்டுவிட்டது. அவரைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை" என்றார். இந்த மோதல்களைக் கவனித்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் நேற்று பேட்டியளித்தபோது, ''தினகரன் மற்றும் திவாகரனின் கட்சிகள் விரைவில் காணாமல் போகும்" என்றார். 

' குடும்ப விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி எப்படிப் பார்க்கிறார்?' என அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.  ''திவாகரன்மன்னார்குடியில் நடக்கும் விவகாரங்களை உளவுத்துறை மூலமாக அறிந்துகொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ' இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது. இவர்கள் நாடகம் போடுகிறார்களா... அல்லது உண்மையிலேயே சண்டை போடுகிறார்களா?' என சிரித்துக்கொண்டே கேட்டார் முதல்வர். 'இப்போது இந்த அரசுக்கு எந்தவித சிக்கல்களும் இல்லை. ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாட்டார்' என உறுதியாக நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படியே தீர்மானம் கொண்டு வந்தாலும், சசிகலா பக்கம் இருக்கும் அனைத்துத் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களும் நேரடியாக எடப்பாடியிடமே பேசுவார்கள். இதற்கு திவாகரன் தயவு தேவையில்லை. தினகரன் பக்கம் உள்ள தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களில், ஒன்பது பேர் எடப்பாடியிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சசிகலா ஆதரவாளரான தகுதிநீக்க எம்.எல்.ஏ ஒருவர், ' எனக்கு ஓ.பி.எஸ்தான் பிரச்னை. மாவட்டச் செயலாளர் பிளஸ் மந்திரி பதவி வேண்டும். இதற்கு ஓ.பி.எஸ் உறுதிமொழி கொடுப்பாரா எனக் கேளுங்கள்' என டிமாண்ட் வைத்திருக்கிறார். கரூரில் செந்தில்பாலாஜிக்கு பெரும் பிரச்னையாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருக்கிறார். இந்த விவகாரத்தை எளிதாகக் கையாள முடியும் என நினைக்கின்றனர் அமைச்சர்கள். 

சிலர் பேசும்போது, ' இந்த அரசு கவிழ்வதில் எங்களுக்கு விருப்பமில்லை. அமைச்சர் பதவி வேண்டாம். எங்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள்' எனக் கோரிக்கை வைத்துள்ளனர். அ.தி.மு.க ஆதரவில் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களும் இதே மனநிலையில்தான் உள்ளனர். ' இந்த அரசு கவிழ்ந்துவிடக் கூடாது' எனக் கொங்கு மண்டல எம்.எல்.ஏவும் ' சமூதாயரீதியாகத்தான் எனக்கு நெருக்கடிகள் வரும். இருந்தாலும் உங்களைத்தான் ஆதரிப்பேன்' என தென்மாநில எம்.எல்.ஏவும் உறுதி கொடுத்துள்ளனர். மற்றொரு எம்.எல்.ஏ பேசும்போது, ' நீங்கள் பா.ஜ.கவுடன் இருப்பதுதான் எனக்கு சங்கடம். மற்றபடி வேறு எந்தப் பிரச்னைகளும் இல்லை' எனத் தெளிவாகக் கூறிவிட்டார். இப்படி ஒவ்வொருவரும் எடப்பாடி அரசுக்கு ஆதரவான நிலையில் உள்ளனர். காங்கிரஸ் தரப்பில் இருந்தும் சில எம்.எல்.ஏ-க்கள் பேசிக் கொண்டுள்ளனர். ' ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள்' என தினகரன் பேசுவதையெல்லாம் ஒரு பொருட்டாகவே முதல்வர் எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல், 'எம்.எல்.ஏ-க்களைத் திரட்டிக் கொண்டு வருவேன்' என திவாகரன் பேசுவதையும் நகைப்புக்குரியதாகத்தான் பார்க்கிறார். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் நேற்றைய பேட்டியில் இருவரையும் விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி" என்றார் விரிவாக. 


டிரெண்டிங் @ விகடன்