வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (30/04/2018)

கடைசி தொடர்பு:15:00 (30/04/2018)

காவிரிக்காக நடந்த கூட்டத்தைப் புறக்கணித்த அ.தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ-க்கள்

ஒரே நாளில் இரண்டு இடங்களில் பொதுக் கூட்டம் நடக்கிறது, அதில் இங்கு கலந்துகொள்ளும் பேச்சார்களே அங்கும் கலந்துகொண்டு பேசுவார்கள் என அறிவிக்கப் பட்டிருந்ததால் கட்சி தொண்டர்களிடையே பெரும் குழப்பம் நிலவியது.

கடலூர்

அ.தி.மு.க சார்பில், நேற்றிரவு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடந்த பொதுக் கூட்டத்தை, அ.தி.மு.க எம்.பி-க்களும் எம்எல்ஏக்களும் புறக்கணித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, கிழக்கு-மேற்கு மாவட்டம் சார்பில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்படிருந்தது. கடலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு, மாவட்ட அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமைதாங்குவார். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள் எனக் கூறப்பட்டிருந்தது. அதே நேரத்தில், காவிரி டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோயிலில், இதே கோரிக்கையை வலியுறுத்தி தொகுதி எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க மாநில அமைப்புச் செயலாளருமான முருகுமாறன் தலைமையில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் முனுசாமி, அமைச்சர் சண்முகம் சிறப்புரையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே நாளில் இரண்டு இடங்களில் பொதுக் கூட்டம் நடக்கிறது. மஞ்சக்குப்பம் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பேச்சாளர்களே காட்டுமன்னார்கோயில் கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்ததால், கட்சித் தொண்டர்களிடையே பெரும் குழப்பம் நிலவியது.

பின்னர், காட்டுமன்னார்கோயிலில் நடக்க இருந்த கூட்டம் திடீரென ரத்துசெய்யப்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று இரவு பொதுக் கூட்டம் நடந்தது. ஏற்கெனவே, கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் சம்பத் பங்கேற்கும் பொது நிகழ்சிகள், அரசு விழாக்கள் என எதிலும் கடலூர் எம்.பி-யும், மேற்கு மாவட்டச் செயலாளருமான அருண்மொழித்தேவன், சிதம்பரம் எம்.பி சந்திரகாசி, எம்.எல்.ஏ-க்கள் சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்வதில்லை.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று இரவு நடந்த  பொதுக் கூட்டத்திலும் எம்.பி-க்கள் அருண்மொழித்தேவன்,  காசி, எம்.எல்.ஏ-க்கள் சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.  கட்சித் தலைமை காவிரிப் பிரச்னைக்காக அறிவித்திருந்த பொதுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் ஒற்றுமையாக இருந்து கலந்துகொள்ளாதது, தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.