'முறைகேடு நடக்கதான்செய்கிறது'‍- அதிகாரிகளே கூறியதால் கொந்தளித்த போராட்டக்காரர்கள் | The protesters were angry because of the officers comment

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (30/04/2018)

கடைசி தொடர்பு:15:40 (30/04/2018)

'முறைகேடு நடக்கதான்செய்கிறது'‍- அதிகாரிகளே கூறியதால் கொந்தளித்த போராட்டக்காரர்கள்

கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைப்பது தொடர்பாக நடந்த 2-ம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில், மணல் குவாரியில் முறைகேடுகள் நடந்ததை அதிகாரிகளே ஒத்துக்கொண்டதால், போராட்டக்காரர்கள் கொந்தளித்தனர்.

                                         மணல் குவாரி

அரியலூர் மாவட்டம் திருமானூரில், புதிதாக அமைக்க உள்ள மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பல்வேறுகட்ட போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மணல்குவாரி அமைப்பதுகுறித்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்புவிடுத்திருந்தது. இதில், தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு, மணல்குவாரி அமைக்கும் முடிவிற்கு ஒருமனதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கோட்டாச்சியர் அலுவலகத்தில், கொள்ளிடம் பாதுகாப்புக் குழு மற்றும் அனைத்துக்கட்சியினர் சார்பில் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில் பேசிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏற்கெனவே மணல்குவாரி அமைத்ததில் விதிமுறைகளை மீறி உள்ளதாகவும், தற்போது புதிய மணல் குவாரிகளை அரசுதான் நடத்தப் போகிறது என்றும் இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்ததை அடுத்து, விவசாயிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களில் ஒருவரான தங்க சண்முகசுந்தரத்திடம் பேசினோம். "எப்பாடுபட்டாவது மணல் குவாரி அமைக்கப்பட வேண்டும் என்ற முனைப்போடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே அமைத்த மணல் குவாரியில் முறைகேடு நடைபெற்றதை அதிகாரிகளே ஒத்துக்கொண்டுவிட்டார்கள். இனி, இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்று பேச்சுவார்த்தையின்போது பொதுப்பணிதுறை அதிகாரிகள் உறுதியளித்திருந்த நிலையில்,  தற்போது விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்ற உண்மை தெளிவாகியுள்ளன. புதிய மணல்குவாரி அமைக்கும் முடிவை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்கமுடியாது என்று எங்களின் எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளோம்.

மேலும், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மணல் அள்ளும் இயந்திரங்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கோஷமிட்டதைத் தொடர்ந்து, குவாரியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இயந்திரங்களை உடனடியாக வெளியேற்ற, மாவட்ட வருவாய்அலுவலர் உத்தரவிட்டார். 8 மாவட்டங்களுக்குமேல் செயல்படும் கூட்டுக்குடிநீர் திட்டம், மணல்குவாரி அமைப்பதால் முற்றிலும் செயலிழந்துபோகும்நிலை உருவாகும். ஆகையால், எந்தச் சூழ்நிலையிலும் மணல்குவாரி அமைக்கும் முடிவை ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தோம்” என்று முடித்துக்கொண்டார்.