வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (30/04/2018)

கடைசி தொடர்பு:14:31 (30/04/2018)

''போராடுங்க... ஆனா மக்களுக்குப் பாதிப்பு இல்லாம போராடுங்க" - கஸ்தூரி அகெய்ன்

சம்பந்தமே இல்லாம வேற ஏதோ ஜாதி பேரச் சொல்லி என்னைத் திட்றாங்க

''போராடுங்க... ஆனா மக்களுக்குப் பாதிப்பு இல்லாம போராடுங்க

சென்ற மார்ச் மாதம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்தது உச்ச நீதிமன்றம். அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஏப்ரல் 24-ம் தேதி சைதாப்பேட்டை பகுதியில்  விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல தலித் கட்சிகள் போராட்டம் நடத்தின. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், 'வேளச்சேரி சாலையில் வாகனங்கள் ஓர் அடி தூரம் நகருவதற்கு 45 நிமிடமானது. அரசியல் கட்சிகள் ஏன் எப்போதும் பொதுமக்களுக்குத் தொந்தரவு தரும் வகையிலேயே போராட்டம் நடத்துகின்றன?' என ட்வீட் பதிவிட்டிருந்தார்.

இதற்கு, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பிறகு, கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் கவிதை ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்தக் கவிதைக்கு எதிர்க்கவிதையை கவிஞர் மனுஷ்ய புத்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நடிகையாக மட்டுமின்றி தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்துகொண்டு தனது கருத்துகளைப் பதிவிடும் கஸ்தூரியிடம் பேசினோம்!

கஸ்தூரி

''வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக ஒரு ட்வீட் போட்டிருந்தீங்களே..!''

''ரொம்ப பேர் என் ட்வீட்டைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு, தேவையில்லாம என்னைத் திட்டுறாங்க. நான் ஏதோ தலித் மக்களுக்கு எதிரான ஆள் மாதிரி கிளப்பிவிட்டிருக்காங்க. அந்த ட்வீட்ல நான் என்ன பதிவிட்டிருந்தேன்னு ஒழுங்கா படிச்சா, நிச்சயம் புரியும். பொதுமக்களுக்கு இடையூறு பண்றவிதமா இந்த மாதிரி சாலை மறியல் போராட்டம் பண்றது தப்புனுதான் சொல்லிருந்தேன். ஆனா, நான் அந்தச் சட்டத்திருத்தத்தை ஆதரிச்ச மாதிரி அவங்க பேசிட்டிருக்காங்க. அனிதா இறந்த நேரத்துலயும், கௌசல்யா-சங்கருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் நான் குரல் கொடுத்திருக்கேன். இப்பவும், இந்தப் போராட்டத்துக்கான காரணம் தப்புனு நான் சொல்லவேயில்லை.'' 

கஸ்தூரி

''போராட்டத்துக்கான காரணம் நியாயமானதுனு சொல்றீங்க. அப்ப என்ன மாதிரியான போராட்டங்கள் முன்னெடுக்கணும்னு சொல்றீங்க?''

''தமிழக மக்களானா நாம எல்லாரும் சேர்ந்து ஜல்லிக்கட்டுக்காக மாபெரும் போராட்டம் நடத்தினோம். அதுல மாபெரும் வெற்றியும் அடைஞ்சோம்! இரோம் ஷர்மிளா போராடினாங்களே, அது பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பையாவது ஏற்படுத்திச்சா? இன்னும் எத்தனையோ பேர் தமிழகத்துல மணல்கொள்ளைக்கு எதிரா போராடுறாங்களே... அவங்க யாருமே யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி போராட்டம் பண்ணலையே. போராடுங்க... ஆனா மக்களுக்குப் பாதிப்பு இல்லாம போராடுங்க!''

''பொதுமக்களை பாதிக்காத வகையில்தான் போராட்டம் பண்ணணும்னு சொல்றீங்களா?''

''நிச்சயமா. அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துறப்போ, அது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாதுனுதான் சொல்றேன். அந்தச் சாலை மறியல்ல ஒரு ஆம்புலன்ஸ் வண்டி போக முடியாம டிராஃபிக்ல மாட்டிக்கிச்சு. குப்பையை அள்ளிட்டு வந்த மாநகராட்சி ஊழியர்கள் வெயில்ல நின்னுட்டு இருந்தாங்க. சாப்பாடு ஹோம் டெலிவரி பண்றவங்க நின்னுகிட்டு இருந்தாங்க. இப்படி ஏழை எளிய மக்கள் எந்தவிதத்துலயும் பாதிக்கப்படக் கூடாதுனுதான் நான் சொல்றேன். பொதுமக்கள் பாதிப்படையாம நாம போராட்டம் பண்ணும்போதுதான் அந்தப்  போராட்டத்துக்கு பொதுமக்களோட ஆதரவும் கிடைக்கும்.

இதைப் பற்றி நான் சொன்னா என்னை 'எலைட்'னு சொல்றாங்க. சம்பந்தமே இல்லாம வேற ஏதோ சாதி பெயரைச் சொல்லி என்னைத் திட்டுறாங்க. காவிரி நதிநீர் பிரச்னைக்காக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினப்பவும் என் கண்டனத்தைப் பதிவுசெஞ்சேன். நான் எந்தக் கட்சியிலயும் இல்லை. எனக்கு எந்த அரசியல் ஆதாயமோ, கவனஈர்ப்போ தேவையில்லை. நான் சாதாரண குடிமகளா எனக்கு ஏற்படுற பிரச்னையைப் பதிவுசெய்றேன். பொதுமக்கள் நிறையபேர் பாதிக்கப்படுறாங்க. யாரும் வெளியில சொல்றதில்லை, நான் சொல்றேன். அவ்வளவுதான்!''

கஸ்தூரி

''கவிதை ஒண்ணு நீங்க எழுதினதா ஃபேஸ்புக்ல பரவிவருதே... அது நீங்க எழுதினதுதானா?''

''ஒரே ஒரு கவிதைதான் நான் எழுதினது. நான் எழுதினதா சொல்லி, சில கவிதைகள் போட்டோ ஷாப் மூலமா என் பெயரோடு சுத்திட்டிருக்கு. அது எதுவுமே நான் எழுதினதில்லை.''

''அந்தக் கவிதையை மனுஷ்ய புத்திரன் தன் முகநூல் பக்கத்துல பதிவிட்டு, அதற்கு எதிர்க்கவிதையையும் எழுதியிருக்கிறாரே!''

''அதை எழுதினது நான்தான். நான் எழுதினதை அவர் ஏன் ஷேர் பண்ணினார், அதுக்கு எதிர்க்கவிதை எழுதவேண்டிய அவசியம் அவருக்கு என்னங்கிறதுக்கெல்லாம் நீங்க அவர்கிட்டதான் பதில் கேட்கணும்.''