வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (30/04/2018)

கடைசி தொடர்பு:16:20 (30/04/2018)

ரத்துக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை! கலெக்டர் ஆபீஸை முற்றுகையிட்ட மக்கள்

நெல்லை மாவட்டம் கடையம் அருகே புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். 

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

நெல்லை மாவட்டம், கடையம் அருகே மந்தியூர் என்ற கிராமத்தில் கடந்த 27-ம் தேதி மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையின் அருகில் பள்ளி, கோயில் ஆகியவை உள்ளன. அத்துடன், பெண்கள், குழந்தைகள் செல்லும் வழியில் இந்த மதுபானக்கடை அமைந்து இருப்பதால் பொதுமக்களுக்கு அச்சம் நிலவுகிறது. அதனால், இந்த மதுபானக் கடையை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பெண்களும் மக்களும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். 

இது தொடர்பாக மந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மாரியப்பன் என்பவர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய அப்பகுதி மக்கள், ''எங்கள் கிராமத்தில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் விதிமுறைகளை மீறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. அதை எதிர்த்து மந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட அகம்பிள்ளைகுளம், பிள்ளைகுளம், மந்தியூர், கோவிந்தபேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அத்துடன், அதிகாரிகளைச் சந்தித்து எங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தோம். அதன் காரணமாக அந்தக் கடைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால், கடந்த 27-ம் தேதி அதே இடத்தில் மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

தற்போது கடை அமைக்கப்பட்டு இருக்கும் இடமானது தனியாருக்குச் சொந்தமானது. ஏற்கெனவே அந்த இடத்தில் பிளாஸ்டிக் பொருள்களை எரித்து மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை உள்ளது. அதில் உள்ள கழிவுகள் ஆற்றில் கலப்பதால் பொதுமக்களுக்கும் விவசாயத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அருகே கோயில்கள் மற்றும் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. 

பொதுமக்கள் அந்த வழியாகவே பல்வேறு இடங்களுக்குச் செல்லும் நிலையில் அந்தக் கடையால் சிரமத்தைச் சந்திக்க நேரிடும் என்பதால் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினோம். அதற்காக எங்கள்மீது போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கை தள்ளுபடி செய்வதுடன், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மணவிகளின் நலன் கருதி மதுக்கடைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அத்துடன், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையையும் அங்கிருந்து அகற்ற வேண்டும்’’ என வலியுறுத்தினார்கள். பின்னர், கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.