செருப்பை வீசிய மனுதாரர்... அலறிய பெண் கலெக்டர்... அதிர்ந்துபோன குறைதீர்ப்புக் கூட்டம்

குறைதீர்ப்புக் கூட்டத்தில் சேலம் கலெக்டர் ரோகிணி மீது ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலெக்டர் ரோகிணி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை என்பதால் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி ஆர்.பாஜிபக்ரே பொதுமக்களின் குறைகளுக்கான மனுக்களைப் பெற்று வந்தார். அப்போது கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த ஒருவர் திடீரென காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி கலெக்டர் தலைமீது ஓங்கி வீசினார். இதைப் பார்த்த கலெக்டர் ரோகிணி 'ஆ...’ என்று அலறி விலகினார். அருகில் இருந்த ஆடி.ஆர்.ஓ சுகுமார் தலைமீது செருப்புப் பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் அவரைப் பிடித்து தாக்கினர். சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி, அவரின் கன்னத்தில் அறைந்தார். பிறகு, அவரை அடித்து இழுத்துக்கொண்டு சேலம் டவுன் ஸ்டேஷனுக்கு குண்டுக்கட்டாக இழுத்து சென்றார்கள். இதனால் சற்று நேரம் கலெக்டர் வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினர் இழுத்துக்கொண்டு செல்லும்போது அவரிடம் பேசினோம், ''என் பேரு டாக்டர் ஆறுமுகம். நான் ஐக்கிய சபையில் உறுப்பினராக இருக்கிறேன். கலெக்டரை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று செருப்பைக் கழற்றி அவர் தலைமீது வைக்கப்போனேன். என்னால் பேச முடியவில்லை. மயக்கம் வருவதுபோல இருக்கு. என்னை எல்லோரும் அடிச்சுட்டாங்க'' என்று கூறிக்கொண்டிருக்கும்போதே காவலர்கள் அவரைக் குண்டுக்கட்டாக ஜீப்பில் ஏற்றினர்.

பிறகு அவர் பற்றி விசாரிக்கும்போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு காவலர்கள், அவர் உண்மையில் மனநோய் பாதிக்கப்பட்டவரா, இல்லை வேறு ஏதாவது காரணத்துக்காக இப்படி செய்துள்ளாரா என்பது பற்றி தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். இதுபற்றி டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்டதற்கு, ''அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருடைய சொந்த ஊர் ராசிபுரம், நாமக்கல் கலெக்டரிடமும் ஆசீர்வாதம் செய்வதாகச் செருப்பைக் கழற்றியிருக்கிறார். பிறகு அரெஸ்ட் பண்ணி நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்போது நீதிபதிக்கு முத்தம் கொடுக்கப் போயிருக்கிறார். இப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கலெக்டரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!