'வேலை கொடுங்கள் ; இல்லை நிலத்தைக் கொடுங்கள்' - கலெக்டரிடம் குமுறிய விவசாயிகள் | Farmers protest in Ariyalur collector office

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (30/04/2018)

கடைசி தொடர்பு:19:20 (30/04/2018)

'வேலை கொடுங்கள் ; இல்லை நிலத்தைக் கொடுங்கள்' - கலெக்டரிடம் குமுறிய விவசாயிகள்

"சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வேலை வழங்குங்கள். இல்லையேல் எங்களது நிலங்களை திருப்பிக்கொடுங்கள்" என்று அரியலூர் ஆட்சியரை முற்றுகையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

                              

அரியலூரில் இயங்கிவரும் அரசு சிமென்ட் ஆலைக்குச் சுண்ணாம்புக்கல் சுரங்கப் பயன்பாட்டுக்காக ஆலைக்கு அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள். 1983-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டன. அப்போது வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என அரசு உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் விவசாயிகள் தங்களது நிலத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால், 35  ஆண்டுகளாகியும் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு சிமென்ட் ஆலையில் வேலை வழங்கவில்லை.

                          

 

பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேலை வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் எனப் பல போராட்டங்கள் செய்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் விஜய லெட்சுமியிடம் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தனர். 

                                  

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "இப்பகுதியில் எந்தத் தொழிலும் செய்ய முடியாது என்பதால், இங்குள்ள மக்கள் வெளி மாவட்டத்துக்குப் பிழைப்பு தேடிச் சென்றார்கள். இதை மனதில் வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதியில் சிமென்ட் ஆலை தொடங்கப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று பல்வேறு சட்டம் போட்டார்கள். ஆனால், இப்போது உள்ள அரசியல்வாதிகள் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காமல் வடமாநிலத்தவர்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து பல்வேறு விதங்களில் போராட்டம் நடத்திவிட்டோம்; எந்தப் பயனுமில்லை. 

                         
நிலம் கொடுத்த தகுதி உள்ள விவசாயக் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வரும் மே மாதத்துக்குள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆனால், இன்று வரையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆட்சியர் எங்களுக்கு வேலை வழங்கவில்லையென்றால் எங்களது போராட்டம் வேறு விதமாக இருக்கும்" என்று எச்சரித்தார்கள்.