திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணின் கழுத்து அறுப்பு! எம்.பி.ஏ மாணவன் ஆவேசம்

திருமணத்துக்கு மறுத்த பெண்ணின் கழுத்தை எம்.பி.ஏ படிக்கும் மாணவர் ஒருவர் அறுத்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாணவி

வேலூர் மாவட்டம், காட்பாடி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஷபீர். இவர், வேலூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்துவருகிறார். காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபீத்தரா தேவி. இவர், பி.காம் முடித்து விட்டு ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும், கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சுபீத்தரா தேவியைச் சந்திக்கும் போதெல்லாம், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ஷபீர் கேட்டு வந்துள்ளார். ஆனால், சுபீத்தரா தேவியோ,  'எனது பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே நமது திருமணம் நடக்கும்' எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஆனால், சில நாள்களில் காதல் விவகாரம் சுபீத்தராவின் பெற்றோருக்குத் தெரியவர, அவரைக் கண்டித்தபோது ''நான் ஷபீரைக் காதலிக்கவில்லை. அவனைக் காதலிக்காவிட்டால் என்னைக் கொலை செய்து விடுவதாகக் கூறி மிரட்டுகிறான். அதனால்தான் அவனிடம் காதலிப்பதாகப்  பேசி வருகிறேன்" என்று கூறியுள்ளார். இதனால், சுபீத்தரா தேவியின் பெற்றோர் காட்பாடி காவல் நிலையத்தில் ஷபீர் மீது 2 முறை புகார் அளித்துள்ளனர். அங்கு நடவடிக்கை எடுக்காத நிலையில், எஸ்.பி. அலுவலகத்தில் சென்ற மாதம் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகு ஷபீர் பேசாமல் இருந்துள்ளார். நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஷபீர்  நேற்று சுபீத்தராவுக்கு போன் செய்து, 'உன்னுடன் பேச வேண்டும்' எனக் கூறியுள்ளார். 

இதனை ஏற்று இருவரும் நேற்று மாலை வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சந்தித்துப் பேசிக்கொண்டு, அருகில் உள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். அப்போதும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சுபீத்தரா தேவியைத் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார் ஷபீர். அப்போது, மதத்தைக் காரணம் காட்டி திருமணத்துக்கு மறுத்துள்ளார் சுபீத்தரா தேவி. இதனால் ஆத்திரமடைந்த ஷபீர், தான் வைத்திருந்த பேனா கத்தியைக் கொண்டு திடீரென சுபீத்தராவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுபீத்தராவை, அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஷபீரிடம் விசாரித்தனர். ''நான்தான் சுபீத்தரா தேவி கழுத்தை அறுத்தேன். அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றதால், கழுத்தை அறுத்தேன்" என ஒப்புக்கொண்டார். இதையடுத்து வேலூர் வடக்கு காவல் துறையினர், ஷபீர் மீது கொலை முயற்சி மற்றும் பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஷபீரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுபீத்தரா தேவி கழுத்தை அறுக்கப் பயன்படுத்திய கத்தி 4 வருடங்களுக்கு முன் சுபீத்திரா, ஷபீருக்குப் பரிசாக அளித்த கத்தியாகும். சுபீத்தரா தேவி வித்தியாசமான கத்திகளைச் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர். அந்த வகையில், சேகரித்த கத்தியையே தன் காதலனுக்குக் காதல் பரிசாகக் கொடுத்துள்ளார். அந்தக் கத்தியாலேயே தற்போது அறுக்கப்பட்டுள்ளார் சுபீத்தரா தேவி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!