வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (30/04/2018)

கடைசி தொடர்பு:20:00 (30/04/2018)

'செத்த பிறகும் சாதி பார்க்கிறார்கள்' - கொந்தளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

'செத்த பிறகும் சாதி பார்க்கிறார்கள்'- கொந்தளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டார்கள்.

பிரதாபன்இதுபற்றி பேசிய அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான பிரதாபன், ''சாதி பாகுபாடு நிறைந்த இந்த நாட்டில் வன்கொடுமை சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் உடனே எஃப்.ஐ.ஆர். போட்டு  கைது செய்து வெளியே வர முடியாத அளவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்கூட இன்னமும் சாதியக் கொடுமைகள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற டிவிசன் பென்ச் தீர்ப்பின்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் எஃப்.ஐ.ஆர் போடத் தேவையில்லை. கைது செய்ய வேண்டாம். சிறையில் அடைக்க பிறகு ஜாமீன் வழங்கலாம் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் பட்டியலின மக்களின் ஒரே பாதுகாப்பு அரணாக இருந்த இந்த வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்திருக்கிறார்கள்.

தற்போது வரை ரேஷன் கடை, தண்ணீர் டேங்க் ஆகியவை உயர் சாதி மக்கள் வசிக்கும் இடத்தில் இருக்கும். அவர்கள் பார்த்து பட்டியலின மக்களுக்குத் தண்ணீர் எடுத்துவிட்டால் மட்டுமே நாங்கள் குடிக்க முடியும் நிலை உள்ளது. வாழும்போதுதான் இந்தப் பாகுபாடு என்றால் செத்த பிறகு சுடுகாட்டில்கூட சாதிப் பிரிவு இருக்கும்போது வன்கொடுமை சட்டம் அவசியமற்றது என்று கருதுவது தவறானது. ஆகவே, வன்கொடுமை சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்றார்.