வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (30/04/2018)

கடைசி தொடர்பு:19:13 (30/04/2018)

மெரினாவுக்குத் தடை..! சேப்பாக்கத்தை முற்றுகையிட்ட வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர்

மெரினாவுக்குத் தடை..! சேப்பாக்கத்தை முற்றுகையிட்ட வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர்

''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்'' எனத் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் நேற்று (29-04-2018) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16- ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கியது. அப்போது, ''காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்துக்குள் அமைக்க வேண்டும்'' என உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்தது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது எனக் கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், மத்திய அரசும் அதற்கு உடந்தையாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கடைசி தேதியான மார்ச் 29- ம் தேதி முடிவடைந்தும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததால், அதுமுதல் தமிழகம் போராட்டக்களமாக மாறியது. அரசியல்வாதிகள், திரைப்படத் துறையினர், மாணவ அமைப்பினர், விவசாயிகள் எனப் பலரும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லி நாள்தோறும் பல்வேறு வகைகளில் போராடி வருகின்றனர். ஆனால், மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசோ, கர்நாடகத் தேர்தலை மனதில்வைத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலந்தாழ்த்தி வருகிறது. 

வாழ்வுரிமை கூட்டமைப்பு

இந்த நிலையில், காவிரி மேலாண்மை அமைப்பதற்காகச் சென்னை மெரினாவில் 90 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வேண்டி தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உயர் நீதிமன்றத்தில் செய்த மனுத்தாக்கல், விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், ஒருநாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக்கொள்ள, அதாவது கடந்த 28- ம் தேதி மட்டும் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து அன்று மாலையே அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்தது. இதனால், மெரினாவில் போராடத் தடை விதிக்கப்பட்டது. மெரினாவில் போராடத் தடை விதித்ததற்கும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, வழக்கறிஞர் புகழேந்தி, நடிகை கஸ்தூரி, கௌசல்யா சங்கர் மற்றும் பல இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், அந்தந்த இயக்கங்களின் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மெரினா பீச்சுக்குள் சென்றுவிடாமல் தடுக்க சுமார் 2,000 க்கும் அதிகமான போலீஸார்கள் ஆர்ப்பாட்டக் களத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், மெரினா கடற்கரையும் காவலர்களால் நிறைந்திருந்தது. இதுதவிர, சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு போலீஸாரும் குவிக்கப்பட்டனர். சாதாரணமாகக் கறுப்புச் சட்டையில் வந்தவர்கள், ஐந்து பேருக்கு மேல் செல்பவர்கள் என அனைவரையும் சோதனை செய்த பின்னரே போலீஸார், பீச்சுக்குள் அனுமதித்தனர். ஆர்ப்பாட்டத்துக்குக் காவல் துறை ஒருமணி நேரம் மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில், மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரை வாழ்வுரிமைக் கூட்டத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, ''வேண்டும் காவிரி... வேண்டாம் ஸ்டெர்லைட்" என்ற முழக்கங்கள் ஒலிக்கப்பட்டன. ''காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக வாழ்வுரிமைக் கூட்டமைப்புத் தொடர்ச்சியாகப் பல போராட்டங்களை நடத்தும்'' என்று இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

வாழ்வுரிமை கூட்டமைப்பினர்

''காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக வரைவு செயல் திட்டம் ஒன்றை மே 3- ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்'' என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்