வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (30/04/2018)

கடைசி தொடர்பு:20:20 (30/04/2018)

அன்னதானம் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, மயக்கம்! பதற்றமான கோயில் திருவிழா

சித்திரை மாத செடல் திருவிழா நடந்துள்ளது. நேற்று மாலை பக்தர்களுக்கு கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இரவு அன்னதானம் சாபிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பப்பட்டுள்ளது

விருத்தாசலம் அருகே கோயில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருத்தாசலம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ளது வி.சாத்தமங்கலம் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று சித்திரை மாத செடல் திருவிழா நடந்துள்ளது. நேற்று மாலை பக்தர்களுக்கு கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இரவு அன்னதானம் சாபிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  இன்று காலையில் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அரிஹரன் (4), பிரேமா (25), திவ்யா (20), கவிதா (28), ஜெயந்தி (38), நீதிராஜன்(18), பிரபு (35) உட்பட  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50 பேர் உள் நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்டக் கலெக்டர் தண்டபாணி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அதிகாரிகளுடன் சி.சாத்தமங்கலம் கிராமத்துக்குச் சென்று கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தினார். கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவில் உணவு சாப்பிட்டவர்கள் வாந்தி, மயக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.