வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (02/05/2018)

கடைசி தொடர்பு:14:49 (02/05/2018)

''தினம் 12 மணி நேரப் படிப்பு, என் குழந்தைகள் விஷயத்தில் நோ காம்ப்ரமைஸ்'' - குடிமைப் பணி தேர்வில் வென்ற அனுகுமாரி

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவியான அனு குமாரி, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வில், தேசிய அளவில் இரண்டாம் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

'பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்' என்பதைத் தனது சாதனையால் மீண்டும் அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளார், அனு குமாரி. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவியான அனு குமாரி, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வில், தேசிய அளவில் இரண்டாம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அனு குமாரி

Courtesy:wikibio.in

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் நடத்துகிறது. 990 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில், 750 ஆண்களும் 250 பெண்களும் தேர்வுபெற்றுள்ளனர். முதல் 25 பணிகளுக்கான இடங்களில், 8 இடங்களைப் பெண்கள் பெற்றிருப்பது என்பது மகிழ்வான விஷயம். இதில், இரண்டாவது முயற்சியிலேயே தேசிய அளவில் இரண்டாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனைப் படைத்துள்ளார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அனு குமாரி. இவர், தில்லி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பட்டப் படிப்பையும், நாகபுரியில் உள்ள ஐஎம்டி கல்லூரியில் எம்பிஏ படிப்பையும் முடித்துள்ளார்.

  தனது வெற்றி குறித்து குறிப்பிட்ட அனு குமாரி, ''எனக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஒரு குழந்தையின் அம்மாவாகவும், குடும்பத் தலைவியாகவும் இருந்தவாறு குடிமைப் பணிக்காகத் தயாராவது சிக்கலான ஒன்றுதான். ஆனால், ஒரு குழந்தையின் தாயாகிவிட்டதுக்காக என் லட்சியத்தைச் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் நான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் இருந்தது. தினமும் 12 மணி நேரம் தயாராவேன். அதே நேரம், என் குழந்தைக்கான எந்த ஒரு விஷயத்திலும் நான் காம்ப்ரமைஸ் செய்துகொண்டதில்லை. எங்கள் ஊரில், செய்தித்தாள்கூடச் சரியாகக் கிடைக்காது. எந்த ஒரு பயிற்சி வகுப்புக்கும் நான் போனதில்லை. முழுக்க முழுக்க என் உழைப்பை மட்டுமே நம்பினேன். சாதாரண மொபைல் போனில்தான் அன்றாட செய்திகள் உள்பட தேவையான தகவல்களைப் பார்ப்பேன். 

எங்கள் மாநிலத்தில் பெரிய அளவுக்குக் கல்வியறிவு கிடையாது. நிறைய சகோதரிகள் வீட்டை வீட்டே வெளியே வரமாட்டார்கள். ஆனாலும், எங்கள் மாநிலத்திலிருந்தும் இப்போது, விளையாட்டு உள்பட பல துறைகளில் பெண்கள் சாதனையுடன் வெளியேவர ஆரம்பித்துவிட்டார்கள். எங்களைப் போன்ற சில பெண்களின் வெற்றி, எங்கள் மாநிலத்தில் உள்ள மற்ற பெண்களின் வாழ்க்கைக்கு வெளிச்சமாக அமையும். பெண்கள் முன்னேற நினைத்தால், தங்கள் குறிக்கோளைத் தீர்க்கமாக அமைத்துக்கொள்ள வேண்டும். என்னுடைய இந்த வெற்றி ஒருநாளில் கிடைக்கவில்லை. வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயார்படுத்தத் தொடங்கினேன். 2016-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினேன். அப்போது, வெறும் 1 மதிப்பெண்ணில் கட் ஆஃப் இலக்கை நழுவ விட்டேன். முதல் முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் சோர்ந்துவிடவில்லை. 'என்னால் அடுத்த முயற்சியில் வெற்றிபெற முடியும் என உறுதியாக நம்பினேன். அந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து யு.பி.எஸ்.சி தேர்வுக்காகக் கடுமையாக உழைத்தேன். அதன் பலனாக, யு.பி.எஸ்.சி தேர்வில் தேசிய அளவில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் சாதிக்கும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்னையும் ,என்னுடைய எண்ணத்தையும் புரிந்து கொண்டு எல்லாச் சூழ்நிலையிலும் உறுதுணையாக நின்றனர். குடும்பத்தில் உள்ளவர்கள் பெண்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டாலே அது அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். நான் நிச்சயம் பெண்களின் முன்னேற்றத்துக்காக உழைப்பேன். என்னைப் போன்று என் சகோதரிகளும் சாதிக்க வேண்டும்'' என்கிற அனு குமாரி, சாதிக்கும் துடிப்புடன் இருக்கும் சகோதரிகளுக்குச் சொல்வது...

''தயக்கங்களை, தடைகளைத் தாண்டி ஒரே ஓர் அடி எடுத்து வையுங்கள் பெண்களே. அது, உங்களை அடுத்தடுத்த தளத்துக்கு எடுத்துச்செல்லும்!"


டிரெண்டிங் @ விகடன்