சிட்டுக்குருவிகளைக் காக்க சூழலியல் ஆர்வலர்களுடன் களமிறங்கிய கோவை மாநகராட்சி!

கோவையில் சிட்டுக்குருவிகள் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்துதல், அவற்றைப் பாதுகாத்தல் மற்றும் சிட்டுக்குருவிகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளுதல், அவற்றுக்குக் கூடு அமைப்பது போன்றவற்றுக்கான திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

கோவையில் சிட்டுக்குருவிகள் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்துதல், அவற்றைப் பாதுகாத்தல் மற்றும் சிட்டுக்குருவிகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளுதல், அவற்றுக்குக் கூடு அமைப்பது போன்றவற்றுக்கான திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

Project Sparrow

மனிதர்களை மிகவும் நம்பி, நம்முடன் ஒன்றி வாழக்கூடிய பறவை இனங்களில் ஒன்று சிட்டுக்குருவி. ஆனால், நம் இருப்பிடங்கள் யாவும் நகரமயமானதில், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. இதையடுத்து, அவற்றுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி, அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான பணிகளில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கோவை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, சிட்டுக்குருவிகள் காப்பு இயக்கம், க்யூப் மற்றும் மகேந்திரா பம்ப்ஸ் போன்றவை ''Project Sparrow” என்ற திட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''கோவை மாநகராட்சியில் உள்ள பள்ளிகள், மாநகராட்சி அலுவலகங்கள், பேருந்து நிலையங்களில் இன்று முதல் சிட்டுக்குருவி பெட்டிகள் வைக்கப்படும். இதன்மூலம், சிட்டுக்குருவிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கப்படும். கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரை, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். அதன்படி, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுப் பைகள், குளங்களை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சைக்கிள் ஷேரிங் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். தொடர்ந்து இது போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்துவோம்" என்றார்.

இதுகுறித்து க்யூப் அமைப்பின் வினிபீட்டர் கூறுகையில், ''கோவை மாநகராட்சிக்குள் எந்த இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகள் இருக்கின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வோம். அப்படிச் சிட்டுக்குருவி அதிகம் காணப்படும் இடங்களில், மாதம் ஒருமுறை விழிப்பு உணர்வு பிரசாரங்களில் ஈடுபடுவோம். பின்னர், பொதுமக்களின் பங்களிப்போடு, சிட்டுக்குருவிகளுக்கான பெட்டிகள் வைக்கப்படும். அவற்றுக்குத் தனித்தனியாக வரிசை எண் அமைத்து, அவை ஆராய்ச்சி மாணவர்களால் தொடர்ந்து கண்காணிப்படும். ஆண்டுதோறும் அவற்றின் முடிவுகள் வெளியிடப்படும். மாநகராட்சி முழுவதும் 3,000 சிட்டுக்குருவிகள் பெட்டிகள் வைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

சிட்டுக்குருவி காப்பு இயக்கத்தின் பாண்டியராஜன் கூறுகையில், ''சிட்டுக்குருவிகள் பெரும்பாலும் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்காகத்தான், இந்தப் பெட்டிகளைப் பயன்படுத்தும். இதனால், இந்தப் பெட்டிகள் விஞ்ஞானப் பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் ஓட்டை 32 மி.மீ அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில், சிட்டுக்குருவியைத் தவிர்த்து வேறு எந்த உயிரினங்களும் நுழைய முடியாது. இந்தப் பெட்டியில் வேறு எதையும் வைக்க வேண்டியதில்லை. மழைநீர் படாத இடங்களில் இந்தப் பெட்டியை வைத்தால் போதும். இதன் மூலம் வெகுஜன மக்களிடம் சிட்டுக்குருவிகள் குறித்து விழிப்பு உணர்வை எடுத்துச் செல்லலாம். மேலும், இதன்மூலம், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் கண்டிப்பாக உயரும்” என்றார்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள் கூறுகையில், ''இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. சிட்டுக்குருவிகளுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுக்க எங்களது பங்களிப்பையும் வழங்குவோம்” என்றனர். சிட்டுக் குருவிகளுக்குக் கூடுகள் அமைக்க விரும்புபவர்கள் 99433 20303 மற்றும் 99438 50907 எண்களை தொடர்பு கொள்ளவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!