'கந்துவட்டி பெண்ணிடமிருந்து பாதுகாப்பு வேண்டும்!’ - கதறும் குடும்பம்

கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கும் பெண்ணிடமிருந்து தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கதறியபடி நெல்லை ஆட்சியரைச் சந்தித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கும் பெண்ணிடமிருந்து தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கதறியபடி நெல்லை ஆட்சியரைச் சந்தித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. 

கந்துவட்டி புகார்

நெல்லைச் சந்திப்பு சி.என்.கிராமத்தைச் சேர்ந்தவர், சொர்ணம். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 3 பெண் குழந்தைகளையும், இரு ஆண் மகன்களையும் இவரே வளர்த்து வந்தார். இவரது மூத்த மகள் சுதாவுக்குக் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் ஏற்பாடானது. அதற்கு பணம் தேவைப்பட்டதால், மணி என்பவரது மனைவி ராஜம்மாளிடம், 1,20,000 ரூபாய் கடனாகப் பெற்றார்.

அந்தக் கடனுக்காக மாதம்தோறும்,14,000 ரூபாய் வட்டியாகச் செலுத்தி வந்துள்ளார். கடந்த 2016 நவம்பர் மாதம் முதல் 2017 டிசம்பர் மாதம் வரையிலும் 13 மாதங்களுக்கு 1,82,000 ரூபாய் வட்டியாகச் செலுத்தி வந்த நிலையில், தொடர்ந்து அவரால் பணம் செலுத்த முடியவில்லை. சொர்ணத்தின் இரு மகள்கள் ஜவுளிக்கடையில் வேலை செய்தும், மகன்கள் இருவரும் கொத்தனார் வேலை செய்தும் சம்பாதித்த பணம் முழுவதையும் வட்டியாகச் செலுத்தி வந்த நிலையில், இன்னும் 1,50,000 ரூபாய் பணம் உடனடியாகத் தர வேண்டும் என வட்டிக்குக் கொடுத்த ராஜம்மாளும் அவரது மகன் சக்தியும் மிரட்டியுள்ளனர்.

ஆனால், சொர்ணத்திடம் பணம் இல்லாததால் கால அவகாசம் கேட்டுள்ளார். அதற்காக அவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தினமும் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதால் அச்சமடைந்த சொர்ணம், பயம் காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அதில், தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிரட்டும் ராஜம்மாள், அவரது மகன் சக்தி ஆகியோரிடமிருந்து தங்களது உயிருக்குப் பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை மாநகரக் காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!