'அண்ணா பெயரை மறைத்து குற்றவாளிக்கு மணிமண்டபமா?’ - பொங்கும் தி.மு.க.

சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும், தி.மு.க.,வின் தீவிர விசுவாசியுமான புவனேஸ்வரி இன்று கலெக்டரைச் சந்தித்து அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதை எதிர்த்து மனு கொடுக்க வந்திருந்தார்.

 

அவரிடம் இதுப்பற்றி விசாரித்தோம். மாநகராட்சி எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும், 4வது கோட்ட தி.மு.க., உறுப்பினருமான புவனேஸ்வரி, ''உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 100 கோடி அபராதமும் விதித்த ஒரு குற்றவாளிக்கு மக்கள் வரிப்பணத்தில் மணி மண்டபம் கட்டுவது சட்டப்படி குற்றமாகும்.

அதுவும், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பெயரில் இயங்கும் சேலம் மாநகராட்சி அண்ணா பூங்காவில் மணி மண்டபம் கட்டுவதாக நேற்று (29.4.2018) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். அறிஞர் அண்ணா, அன்னைத் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பெருமகன். அவரது பெயர் மங்கும் விதமாக முன்னாள் முதல்வர்களுக்கு மணிமண்டபம் கட்டுவது அண்ணாவின் பெயரை மறைப்பதாக உள்ளது.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில் மக்கள் கருத்தைக் கேட்காமல் ஆட்சியாளர்களே முடிவு செய்வது தான்தோன்றித்தனமான செயலாகும். சேலம் மாநகரத்தில் வேறு எங்கும் இளைப்பாறும் அம்சங்கள் கொண்ட பூங்காக்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு பூங்கா அண்ணா பூங்கா மட்டும்தான் உள்ளது.

ஆகவே, அண்ணா பூங்காவை விரிவுபடுத்த அங்குள்ள கடைகளை அகற்றி சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விட வேண்டும். அண்ணா பூங்காவில் மணி மண்டபம் கட்டுவதற்கு போதுமான இடம் இல்லை. ஆகவே, வேறு இடத்தில் அதாவது வைப்பவர்களின் சொந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். மேற்கொண்டு எங்கள் செயல் தலைவர் கருத்தைக் கேட்டு, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடுக்கவும் இருக்கிறோம்'' என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!