'கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிகாரி வரவில்லை!’ - தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியல்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நிம்மேலி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தும் அதிகாரி வராததால், ஆத்திரமடைந்த பல்வேறு அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால். அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

கூட்டுறவு சங்க தேர்தல் நேர்மையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. கூட்டுறவு சங்கத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடுநிலையுடன் நடந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தேர்தலை நடத்தும் அதிகாரிகள், ஆளும் கட்சியினர் பலன் அடைய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக தி.மு.க, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள் ஆதங்கத்தோடு புலம்பித் தீர்க்கிறார்கள். பல ஊர்களில் இது சட்டம்-ஒழுங்கு பிரச்னையாகவும் வெடித்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நிம்மேலி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தே.மு.தி.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலர் இன்று காலை ஆர்வத்துடன் நிம்மேலி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு வந்தார்கள். ஆனால் நீண்ட நேரமாகியும் தேர்தல் அதிகாரி வரவே இல்லை. இதனால் கோபமடைந்து, கூட்டுறவு வங்கியின் கதவுகளை இழுத்துப் பூட்டிப் பூட்டுப் போட்டார்கள். மேலும், ஃபோனில் தகவல் தெரிவித்து தங்களது கட்சியினரை வரவழைத்து பெரும் எண்ணிக்கையினரோடு தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்தியே பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!