“தடையை மீறி மெரினாவில் போராட்டம்!” - அய்யாக்கண்ணு அதிரடி

அய்யாக்கண்ணு

“மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை அரசு தடை செய்யாவிட்டால், டெல்லியில் சென்று சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடைசெய்யக் கோரி குமரி முதல் கோட்டை வரை விழிப்பு உணர்வு பணத்தை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், 60 நாட்களில் 21 மாவட்டங்களில் விழிப்பு உணர்வு பயணத்தை முடித்தவர், 61-வது நாளில் ஈரோட்டிற்கு வருகை புரிந்தார்.

அய்யாக்கண்ணு

அய்யாக்கண்ணுஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்த அய்யாக்கண்ணு பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், “மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஆண்கள், ஆண்மைத் தன்மையை இழந்தும், பெண்கள் கருத்தரிக்கும் தன்மையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர். எனவே, மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதைத் தடை செய்ய வேண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்து வருகிறோம். இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சர் மற்றும் பிரதமரிடமும் நேரில் சந்தித்து மனுக்களை அளிக்க இருக்கிறோம். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டெல்லியில் சென்று சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “டெல்டா மாவட்டங்களில் மத்திய அதிவிரைவுப் படையினரை குவித்து, போராட்டத்தில் ஈடுபடும் மக்களை மிரட்டலாம் என நினைக்கிறார்கள். ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்றவற்றை எடுத்து தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்று மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த திட்டங்களையெல்லாம் ஒருகாலமும் அனுமதிக்காமல் நாங்கள் எதிர்ப்போம். அதற்காக துப்பாக்கிச் சூட்டில் செத்தாலும் பரவாயில்லை.  

அனாதையாக இருந்த விவசாயிகளுக்கு, இன்றைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஆதரவாக இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டிற்காக  மெரினாவில் போராடிய இளைஞர்கள், மெரினாவில் எப்போது போராட்டம்?... நாங்களும் கலந்துகொள்ள இருக்கிறோம் என என்னிடம் போனில் அழைத்து பேசுகிறார்கள். மெரினாவில் போராட எங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என எங்களுடைய வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய இருக்கிறார்கள். ஜூன் 9-ம் தேதி வரை எங்களுடைய பிரசார பயணம் இருக்கிறது. அதற்குள்ளாக மெரினாவில் போராட எங்களுக்கு அனுமதி கிடைக்காவிட்டால், மே 9-ம் தேதிக்குப் பிறகு தடையை மீறி மெரினாவில் போராட்டத்தில் இறங்குவோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!