வெளியிடப்பட்ட நேரம்: 02:10 (01/05/2018)

கடைசி தொடர்பு:02:10 (01/05/2018)

நிலுவைத் தொகை வழங்காமல் இழுத்தடித்த தனியார் சர்க்கரை ஆலைக்கு சீல்..!

தஞ்சாவூரில் உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் உள்ள சர்க்கரை குடோனுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. இது மிகவும் காலதாமதமான நடவடிக்கை எனவும் கண் துடைப்பு நாடகம் எனவும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

தஞ்சாவூரில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை 2016-17, 2017-18 ஆகிய இரு அரவை ஆண்டுகளுக்கும் விவசாயிகளுக்கு 30 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு நியாயமான ஆதரவு விலையாக 2,550 ரூபாய் அரசு அறிவித்திருந்தது. ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு இதில் சிறு தொகையைக் கூட ஆரூரான் சர்க்கரை ஆலைக் கொடுக்கவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில்தான் இன்று தஞ்சை மாவட்ட நிர்வாகம், வருவாய் மீட்பு சட்டத்தின்கீழ் திருஆரூரான் சர்க்கரை ஆலையில் உள்ள சர்க்கரை குடோனுக்கு சீல் வைத்துள்ளது. குடோனில் 1,506 சர்க்கரை மூட்டைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது,  ''இது மிகவும் காலதாமதமான நடவடிக்கை. பெரும்பகுதி சர்க்கரையை விற்பனை செய்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டுள்ள சர்க்கரையை விற்பனை செய்தால் 3 கோடி ரூபாய் தான் வருமானம் கிடைக்கும். இங்குள்ள கரும்பு விவசாயிகளுக்கு வர வேண்டிய தொகையோ 30 கோடி ரூபாய். ஆலையில் உள்ள அசையும் சொத்து, அசையா சொத்து அனைத்தையும் சீல் வைத்து, ஏலம் விட்டு விவசாயிகளின் பணத்தை மீட்டுத் தர வேண்டும். அதிகாரிகள் சீல் வைக்கப் போகும் தகவல் முன் கூட்டியே ஆலை நிர்வாகத்திற்குத் தெரிவிக்கப்பட்டதால், பெரும்பாலான சர்க்கரை மூட்டைகளை ஆலை நிர்வாகம், இங்கிருந்து அப்புறப்படுத்தி, வெளியில் எங்கயோ கொண்டு சென்று விட்டது. தஞ்சை மாவட்ட நிர்வாகம் இனியும் கண் துடைப்பு நாடகம் நடத்தாமல் நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள். முன்னதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் தனியார் ஆலை குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.