வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (01/05/2018)

கடைசி தொடர்பு:02:30 (01/05/2018)

பின்வாசல் வழியாக சென்ற அதிகாரி - சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க!

திருப்பூர் கூட்டுறவு வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க-வினரை சந்திக்காமல், பின்வாசல் வழியாக கிளம்பிச் சென்ற தேர்தல் அதிகாரியைக் கண்டித்து அக்கட்சியினர் வங்கி முன்பாக சமைத்து உண்ணும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

தி மு க

திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு இன்று காலை முதல் வேட்பு மனு தாக்கல் பணிகள் நடைபெற்றது. அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரி ஆளும் கட்சி தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக புகார் எழுந்தது. அ.தி.மு.க-வினரின் வேட்பு மனுவை மட்டும் அவர் பெற்றுக்கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரியைக் கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பத் துவங்கினர். அ.தி.மு.க-வினரும் அவர்களுக்குப் போட்டியாக கோதாவில் இறங்க, பின்னர் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. கைகலப்பில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறையினரை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். 

இதேபோல் குமரன் சாலையில் உள்ள கோ-ஆப்ரேட்டிவ் அர்பன் வங்கியிலும் வேட்புமனுவைக் கொடுக்க தி.மு.க-வினரை உள்ளே விடவில்லை என்று புகார் எழுந்தது. எனவே அங்கும் தி.மு.க-வினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இதனால் வங்கியின் பின்புற வாயில் வழியாகத் தேர்தல் அதிகாரி கிளம்பி சென்றார். அப்போது எங்களுக்கு உரியப் பதில் அளிக்காமல் அதிகாரி சென்றதை கண்டித்து வங்கியின் முன்பாக சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தி.மு.க-வினர் அறிவித்தனர். மேலும் சம்பவ இடத்துக்குத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வந்து உரியப் பதில் தரும்வரை போராட்டத்தை தொடரப்போவதாகவும் முடிவு செய்துள்ளனர்.