வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (01/05/2018)

கடைசி தொடர்பு:06:30 (01/05/2018)

'செய்திசேகரிக்க அனுமதி இல்லை' - இரு மாநில போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்த பத்திரிகையாளர்கள்!

கண்ணகி திருவிழாவுக்கு செய்திகள் சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

கண்ணகி திருவிழாவுக்கு செய்திகள் சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் போராட்டம் நடத்தினர். 

பத்திரிகையாளர்கள்

மங்கலதேவி கண்ணகிக்கு நேற்று (30/04/2018) திருவிழா நடைபெற்றது. சித்திரை முழு நிலவு நாளில் வருடம் தோறும் கொண்டாடப்படும் இத்திருவிழாவிற்குத் தமிழகம், கேரளத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஒரு நாள் மட்டுமே அனுமதி. அதிலும் காலை 6 மணியில் இருந்து மாலை 3 மணி வரை மட்டுமே செல்ல வேண்டும், ஐந்து லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பக்தர்களை வதைத்தது கேரள வனத்துறை.

இவர்கள், பத்திரிகையாளர்களையும் விட்டுவிடவில்லை. காலை 6 மணிக்கு பிறகே அனுமதி என்ற நிலையில், பலர் பெரியார் புலிகள் காப்பக நுழைவாயிலில் காத்திருந்தனர். சோதனைகள் எல்லாம் முடிந்து மிகத் தாமதமாகவே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், செய்தி சேகரிக்க வந்த தமிழக பத்திரிகையாளர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்ததோடு, ‘’7மணிக்குள் வந்தால் மட்டுமே பத்திரிகையாளர்களை அனுமதிப்போம். இப்போது அனுமதிக்க முடியாது’’ என்று கூறினர் கேரள வனத்துறை அதிகாரிகள். 

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத பத்திரிகையாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் குமுளி எல்லைப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் இரு மாநில போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குச் செல்லும் உணவுப் பொருள்கள் தடைப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கம்பம் பகுதி பத்திரிகையாளர்களுடன், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துகொண்டிருந்த பத்திரிகையாளர்களும் இணைந்துகொண்டு போராட்டத்தில் இறங்கினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இரு மாநில அதிகாரிகளும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எந்தத் தலையீடும் இல்லாமல் பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர் எனக் கேரள வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.