வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (01/05/2018)

கடைசி தொடர்பு:10:05 (01/05/2018)

இலவச பட்டா கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி கொண்டாரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள்  இலவச பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

இதுப்பற்றி பேசிய கொண்டிரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த சின்னபொண்ணு என்ற பெண், ''ஓமலூர் அருகே காடையாம்பட்டி கொண்டிரெட்டியூர் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. எங்க கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எல்லோரும் செங்கல் அறுப்பது  குலத்தொழில். விடியற்காலை 6 மணிக்கு போனால் இரவு 7 மணி வரை அறுப்போம். ஒரு நாளைக்கு பொம்பளையாளுக்கு 150, ஆம்பளையாள் 200க்கு அறுப்போம்.

தற்போது விற்கிற விலைவாசி காலத்தில் இந்த பணத்தை வைத்துக் கொண்டு சாப்பிட முடியுமா? குழந்தைகளை படிக்க வைக்க முடியுமா? வசதியாக வாழ முடியுமா? கிடைக்கிற பணத்தை வைத்துக் கொண்டு வயிற்றை கழுவுவதே பெரும் சிரமமாக இருக்கிறது. நாங்க அறுத்து கொடுக்கிற செங்கல் இந்த மாவட்டத்துக்கே வீடுக் கட்ட உதவுகிறது. ஆனால் நாங்க ஒரு வீடு கட்ட செங்கல் கூட வாங்க முடியாது.

எங்க முன்னோர் காலத்தில் இருந்தே இந்த கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்க வசிக்கும் பகுதிக்கு பட்டா கிடையாது. புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்துட்டு இருக்கிறோம். நாங்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு பல முறை வந்து முறையிட்டு பார்த்து விட்டோம். பட்டா கிடைத்த பாடில்லை. இப்ப சேலம் கலெக்டர் ஒரு பெண்ணாக இருப்பதால் எங்க ஊரில் உள்ள எல்லா பெண்களும் கிளம்பி வந்திருக்கிறோம். கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போனால் அந்தம்மாவை பார்க்க விட மாட்டங்கறாங்க. எங்க குறையை யாரிடம் சொல்லி முறையிடுவது'' என்று குமுறினார்.