குட்கா விவகாரம்! - ஆர்ப்பாட்டம் நடத்திய கோவை தி.மு.க எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு

கோவை கண்ணம்பாளையம் குட்கா தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை கண்ணம்பாளையம் குட்கா தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காகத் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

குட்கா

குட்கா ஊழல் விவகாரம் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் பாக்கு ஆலை ஒன்றில் சட்டவிரோதமாகக் குட்கா மற்றும் போதைப் பொருள்கள் கிடைப்பதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கோவை போலீஸ் எஸ்.பி மூர்த்தி தலைமையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீஸார் அந்த ஆலையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, 650 கிலோ எடை கொண்ட புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 450 கிலோ மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை தொடர்பாக ஆலையில் பணியாற்றி வந்த ரகுராமன், அஜய், ராம்தேவ், சோஜிராம் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆலையை நடத்திவந்த அமித்ஜெயின் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். குறிப்பாக, எம்.டி.எம் குட்கா அதிபர் மாதவராவுக்கும் அமித்ஜெயினுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் இந்த விஷயத்தை ஆஃப் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்து, கோவை தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

கார்த்திக் எம்.எல்.ஏ

கண்ணம்பாளையம் குட்கா தொழிற்சாலையில் கார்த்திக் எம்.எல்.ஏ

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது சூலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி, பொது இடத்தில் கூடுதல், அனுமதியின்றி போராட்டம் நடத்துதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கண்ணம்பாளையம் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சண்முகம், சுரேஷ் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் நள்ளிரவில் கைது செய்தனர். மேலும், எம்.எல்.ஏ கார்த்தியையும் கைது செய்வதற்கு போலீஸார் தீவிரம் காட்டிவருகின்றனர். ஆனால், கார்த்திக் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை தி.மு.க-வினர் கூறுகையில், “குட்கா விஷயத்தை பெருசாக்கினா இவங்களுக்குதான் பிரச்னைனு அ. தி.மு.க-காரங்களுக்கு நல்லா தெரியும். அதனால்தான், ஆலை நடத்தியவரை விட்டுவிட்டு எங்களைக் கைது செய்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராகவும் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதால் தான் தி.மு.க-வினரை கைது செய்திருக்கிறார்கள்” என்றனர்.

கோவை

கைது செய்யப்பட்ட தி.மு.க-வினரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த போலீஸார் அழைத்துவந்தனர். அப்போது, அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!