வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (01/05/2018)

கடைசி தொடர்பு:12:15 (01/05/2018)

சேலம் கலெக்டர் ஆபீஸூக்கு நடையாய் நடக்கும் பெண்! கை, கால் செயலிழந்த மகனுக்காகக் கண்ணீர்விடும் தாய்

''என் மகனுக்கு 7 மாதத்தில் காய்ச்சல் வந்து இடது கை, வலது கால் செயலிழந்துவிட்டது. பேச்சும் சரியாக வரவில்லை. யாரும் உதவுவது போல தெரியவில்லை. இன்னும் ஓரிரு மாதங்கள் பார்த்துட்டு நானும், என் குழந்தையும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்'’ எனக் கண் கலங்கினார் ராஜாமணி என்ற பெண். 

இதுபற்றி அந்தப் பெண்மணி ராஜாமணி, ''எங்க குடும்பம் ரொம்ப ஏழ்மையான குடும்பம். எங்க அப்பா, அம்மாவுக்கு நானும் ஒரு தங்கையும் இருந்தோம். ஏற்காடு பஸ் ஸ்டாண்ட்ல டீ கடையில் கர்நாடகாவை சேர்ந்த ராஜா என்ற பையன் வேலை செய்துகொண்டிருந்தார். அவருகிட்ட எங்கப்பா பணத்தை வாங்கிட்டு எனக்கு 12 வயது இருக்கும்போதே அவருக்கு என்னைக் கல்யாணம் செய்து கொடுத்துட்டார். எங்களுக்கு கல்யாணம் ஆகி 13 வருடம் குழந்தை இல்லை. குழந்தை உருவாகாத வரை என்னிடம் அன்பாக இருந்தவர் 13 வருடம் கழித்து நான் கருதரித்த பிறகு, என் மீது கோபம் கொள்ள ஆரம்பித்தார். குழந்தை பிறந்து 3 மாதத்தில்  வேறொரு பெண்ணோடு ஓடிவிட்டார். நானும் பல இடங்களில் அலைந்து பார்த்தும் கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு என் குழந்தையை வளர்த்து வந்தேன். பிறக்கும்போது என் குழந்தை நல்லா இருந்தான். 7 மாதத்தில் காய்ச்சல் வந்து இடது கை, வலது கால் செயல் இழந்துவிட்டது. பேச்சும் சரியாக வரவில்லை.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் ஓரளவுக்கு சரி செய்யலாம் என்று சொல்கிறார்கள். மருத்துவமனைக்குக் கூட்டிப்போக ஆள் இல்லை. மருத்துவமனைக்குப் போனால் சாப்பாட்டுக்கு வழியில்லை. எங்க அப்பா இறந்துட்டார். எங்க அம்மா, தங்கையிடம் அடைக்கலம் போனேன். என்னை அடித்து துரத்தி விட்டுட்டாங்க. நான் தற்போது ஏற்காடு ஜெரினா கார்டன் பகுதியில் மின்சார வசதிகூட இல்லாத பாழடைந்த வீட்டில் வசித்துக்கொண்டிருக்கிறேன். 7 வருடமாக இந்தப் பையனைத் தூக்கிட்டு சுற்றுகிறேன். குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. வீட்டில் வச்சு பூட்டிட்டு போனால் கதறி அழுது செத்துப் போயிடுவான். குழந்தையைத் தூக்கிட்டுப்போனால் இவனை வச்சுக்கிட்டு நீ எப்படி வேலை செய்வேன்னு சொல்லி யாரும் வேலை தருவதில்லை. இவனைக் காட்டி பிச்சை எடுக்கவும்  சுயமரியாதை தடுக்குது. உதவி கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு 6 முறைக்கு மேல் குழந்தையைத் தூக்கிட்டு வந்து பார்த்துட்டேன். யாரும் உதவுவதுபோல தெரியவில்லை. இன்னும் ஓரிரு மாதங்கள் பார்த்துட்டு நானும் என் குழந்தையும் தற்கொலை செய்து  கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்'' எனக் கண்ணீர்விட்டார்.

அந்தக் குழந்தையிடம் உன் பேரு என்ன? என்ன படிக்கப் போகிறாய் என்று கேட்டதற்கு, ''என் பேரு அஜீத், டாக்டருக்குப் படிக்கப் போறேன்'' என்றார். இடைமறித்த அந்த குழந்தையின் தாய் ராஜாமணி, ''இவனுக்கு பிரவின்குமார் என்று பெயர் வைத்தேன். நான் கடைக்கு வேலைக்கு போகும் இடத்தில் டி.வி.யில் படம் பார்ப்பான். அஜீத்னா இவனுக்கு ரொம்ப பிடிக்குமாம். அதனால்  5 வயதிலிருந்தே அவன் பேரு அஜீத்துன்னு தான் எல்லோரிடமும் சொல்லுவான்'' என்று கூறினார்.