வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (01/05/2018)

கடைசி தொடர்பு:14:10 (01/05/2018)

கூடங்குளம் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி!

பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட கூடங்குளம் முதலாவது அணு உலையில் பழுது நீக்கப்பட்டதால் இன்று காலை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட கூடங்குளம் முதலாவது அணு உலையில் பழுது நீக்கப்பட்டதால் இன்று காலை முதல் மீண்டும் மின்சார உற்பத்தி தொடங்கியது.

கூடங்குளம்

கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் இரு அணு உலைகள் இயங்கி வருகின்றன. தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இந்த இரு அணு உலைகளும் முழுக் கொள்ளளவில் இயங்கி வந்த நிலையில், இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்காகவும் பராமரிப்புப் பணிக்காகவும் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து முதலாவது அணு உலை மட்டுமே இயங்கி வந்தது. இரண்டாவது அணு உலையில் பராமரிப்புப் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில், முதலாவது அணு உலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு (28.4.2018) பழுது ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்ற நிலையில், பணிகள் அனைத்தும் முடிவடைந்து இன்று மீண்டும் இயக்கப்பட்டது. முதல்கட்டமாக 300 மெகாவாட் அளவில் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாக அணு உலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

முதலாவது அணு உலையில் படிப்படியாக மின்சாரத்தின் உற்பத்தி அளவை அதிகரிக்கும் பணிகள் நடைபெறும் என்றும் அடுத்த சில தினங்களில் முழு உற்பத்தி திறனான 1000 மெகாவாட் இலக்கை எட்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாவது அணு உலையில் பராமரிப்புப் பணிகளும் எரிபொருள் நிரப்பும் பணிகளும் நடந்து வருவதால் விரைவில் மின்சார உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அணு உலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.