வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (01/05/2018)

கடைசி தொடர்பு:14:35 (01/05/2018)

நோக்குகூலிக்கு அதிரடியாகத் தடைப்போட்ட கேரள அரசு!

பொருட்கள் ஏற்றி இறக்குவதை பார்த்தாலே அதற்கு அடாவடியாக பணம் வசூலிக்கும் நடைமுறைக்கு கேரள அரசு தடை விதித்துள்ளது.

பொருள்கள் ஏற்றி, இறக்குவதைப் பார்த்தாலே அதற்கு அடாவடியாகப் பணம் வசூலிக்கும் நடைமுறைக்கு கேரள அரசு தடை விதித்துள்ளது.

 பாரம் ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள்

கேரள மாநிலத்தில் தொழிற்சங்க அமைப்புகள் மிகவும் பலமானவை. அதிலும் பாரம் ஏற்றி இறக்கும் தொழிலாளர் சங்கங்களால் பலருக்கு சங்கடங்கள் அடிக்கடி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கேரளத்தில் நம்மூர்போன்று வீடுகளுக்கோ நிறுவனங்களுக்குகோ தேவையான பொருள்களை நாமே டெம்போக்களில் ஏற்றிக் கொண்டுவந்து இறக்கிவிட முடியாது. பாரம் ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள்தான் பொருள்களை ஏற்றி, இறக்குவார்கள். தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்படட்டும் என நாம் அவர்கள் மூலம் பொருள்களை இறக்கினால் வாங்கிய பொருளுக்கு சமமான தொகையை இறக்குக் கூலியாகக் கேட்பார்கள். இதனால்தான் கேரளத்தில் தொழில் தொடங்க பலரும் பயப்படுகிறார்கள். சில நேரங்களில் டைல்ஸ், கண்ணாடி பொருள்களைக் கவனமாக இறக்கும்படி கூறினாலும் தொழிலாளர்கள் அவசரகதியில் இறக்குவதால் உடைசல் ஏற்படும். இதனால் சிலர் சொந்த தொழிலாளர்களைக் கொண்டு அந்தப் பொருள்களை இறக்குவார்கள். அப்படி இறக்கிக்கொண்டிருக்கும்போது தொழிற்சங்கத்தினர் வந்து பொருள்களை இறக்கி முடிக்கும் வரை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். பின்னர் நோக்கு கூலி (பார்த்துக்கொண்டிருந்ததற்கான கட்டணம்) என அந்தப் பொருளை ஏற்றி, இறக்கும் அளவுக்கான தொகையை ரசீதுபோட்டு வசூலித்துவிட்டுதான் செல்வார்கள்.

பணம் கொடுக்க முடியாது எனக் கூறினால், அந்த ஊர் தொழிற்சங்கத்தினர் திரண்டுவந்து பிரச்னை செய்துவிடுவார்கள். நோக்கு கூலியால் நொந்துபோனவர்கள் கொஞ்சம்நஞ்சமல்ல. கேரள பிரபல நடிகர் கரமன ஜனார்த்தனனின் மகன் சுதீர் கரமன தனது திருவனந்தபுரத்தில் வீட்டில் வைப்பதற்காகக் கடந்த மாதம் ஆட்கள் மூலம் டைல்ஸ் இறக்கினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் நோக்குகூலி என ரூ.25,000 வசூலித்துவிட்டனர். இதுகுறித்து நடிகர் சுதீர் கரமன பெரிய அளவில் பிரச்னை செய்ததை தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தொழிற்சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தைத் திரும்ப பெற்றுக் கொடுத்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எந்தப் பொருள்களை ஏற்றி, இறக்க எவ்வளவு கூலி வசூலிக்க வேண்டும் என கேரள அரசு வரைமுறைப்படுத்தி அறிவித்தது. இந்த நிலையில் தொழிலாளர் தினமான மே 1-ம் தேதியான இன்று முதல் நோக்குகூலி நடைமுறையை ரத்து செய்து கேரள அரசு அறிவித்துள்ளது. இதை மீறி யாராவது நோக்குக் கூலி பெற்றால் மாவட்டத் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் புகார் செய்தால் தொழிலாளர் நலத்துறை அதிகாரி அந்தப் பணத்தை திரும்ப பெற்றுக்கொடுப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கவும் கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.