வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (01/05/2018)

கடைசி தொடர்பு:15:20 (01/05/2018)

உழைப்பாளர் தினத்தில் 3 தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்!

கல்குவாரி

கல்குவாரியில் மண்சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயத்துடன் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உழைப்பாளர் தினமான இன்று 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டியில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. பல எதிர்ப்புகளுக்கும் இடையே செயல்பட்டு வரும் இந்தக் குவாரியில் இன்று காலை 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாகக் கல்குவாரியின் ஒரு பகுதியில் திடீரென மண்சரிந்து, கல் உடைத்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள்மீது விழுந்தது. இதில் குலசேகரன் கோட்டையைச் சேர்ந்த பரமசிவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். நாகராஜ் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். சீனிவாசன் என்பவர் அவசர சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்த இரண்டு தொழிலாளர்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உழைப்பாளர் தினத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மூன்று உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.