'அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவேன்' - கிராம மக்களிடம் உறுதியளித்த கமல்

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்து அதற்கு பல நலத்திட்ட உதவிகள் செய்து தரப்படும் எனக் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், நடிகர் கமல்ஹாசன், தான் கட்சி தொடங்கியபோது சில கிராமங்களைத் தத்தெடுத்து அதற்கு நலத்திட்ட உதவிகள் செய்து தரப்படும் என முன்னதாக கூறியிருந்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்த அவர் இன்று அங்கு நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று கிராமத்துக்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்தார். 

கிராம சபைக் கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது அதில் பார்வையாளராகக் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “உங்கள் கிராமத்தையும் சேர்த்து மொத்தம் எட்டு கிராமங்களைத் தத்தெடுக்க முடிவு செய்துள்ளோம். ஏன் வெறும் எட்டு கிராமங்கள் மட்டும் தத்தெடுக்கிறீர்கள் என நீங்கள் கேட்கலாம். மற்ற கிராமங்களையும் நம்முடன் சேர்க்க உங்களின் ஆதரவு எங்களுக்கு மிக முக்கியம். நான் இங்கு உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். இனி இது எங்களின் கிராமம். இந்தக் கிராமத்துக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்து தருகிறோம். 

இங்குள்ள ஏரிகள் புனரமைக்கப்படும். சிறிய அணைகள் மற்றும் மடைகள் அதிகத்தூரில் உருவாக்கப்படும். பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும். இங்குள்ள பள்ளியில் 3 அறைகள் குறைவாக உள்ளதாகக் கூறினார்கள், அவை கட்டித் தரப்படும். அதிகத்தூரில் 100 கழிப்பறைகள் கட்டித்தரப்படும் கழிப்பறைகள் கட்டியதும், அதை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? எப்படி பராமரிக்க வேண்டும்? என்பதை நானே நேரில் செய்து காட்டி சொல்லித் தருவேன். தற்போது என் கையில் இருக்கும் பேப்பரில் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. அதில் எது இந்தக் கிராமத்துக்கு மிக முக்கியமானது, உடனே தேவைப்படுவது என்பதை உங்களுடன் ஆலோசித்து விரைவில் அவை நிறைவேற்றப்படும். மற்ற கிராமங்களுக்கு எங்களைக் கொண்டு சேர்ப்பது உங்களின் கடமை” என முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!