வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (01/05/2018)

கடைசி தொடர்பு:16:20 (01/05/2018)

'சற்று வரலாற்றைத் திருப்பி பாருங்கள்' - தம்பிதுரைக்கு பதிலளித்த கனிமொழி

மாநிலங்களின் உரிமைகள் அ.தி.மு.க ஆட்சியில்தான் மத்திய அரசிக்கு தாரைவார்த்துக்கொடுக்கப்பட்டன எனக் கனிமொழி எம்.பி  தெரிவித்துள்ளார். 

கனிமொழி

கன்னியாகுமரியில், எம்.பி நிதியில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை திறந்துவைக்க செல்லும், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சந்திரசேகர ராவுடன் நடைபெற்றது, மாநிலங்களின் உரிமைகளைப் பற்றிய கூட்டம்தானே தவிர, கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி முடிவுகள் எடுக்கப்படும். தி.மு.க ஆட்சியில்தான் மாநிலங்களின் உரிமைகள் பறிபோனதாகத் தம்பிதுரை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க-வினர் சற்று வரலாற்றைத் திருப்பிப் பார்க்கச் சொல்லுங்கள்.

மாநில அரசுகளின் உரிமைகள் அ.தி.மு.க ஆட்சியில்தான் பறிபோனது. மாநில அரசின் பட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது இவர்கள் ஆட்சியில்தான். காவிரி மேலாண்மை வாரியத்தில், பிரதமரை சந்திக்க, இரண்டுமுறை நேரம் கேட்டு ஒதுக்கப்படவில்லை என முதல்வர் சொல்கிறார். ஆனால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரம் கேட்டப்படவே இல்லை என்கிறார். காவிரி விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முதல்வர் வெளிப்படுத்தட்டும். மத்திய -மாநில அரசின் உறவுகள் நன்றாக இருப்பதாகச் சொல்பவர்கள் உண்மையைச் சொல்லட்டும். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கான அனைத்து நன்மைகளும் கிடைக்கும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க