'இங்க பட்டதாரிகள்தான் அதிகம்!' - கோயம்பேடு தொழிலாளர்களின் நள்ளிரவு உலகம் | Here are the graduates too koyambedu market vist

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (01/05/2018)

கடைசி தொடர்பு:17:50 (01/05/2018)

'இங்க பட்டதாரிகள்தான் அதிகம்!' - கோயம்பேடு தொழிலாளர்களின் நள்ளிரவு உலகம்

உழைப்பாளர் தினத்திலும் மூட்டையைத் தூக்கிக்கொண்டு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள். 'இங்க வேலை பார்க்கற 10,000 பேர்ல, டிகிரி முடிச்சவங்கதான் அதிகம். இந்த வேலைலதாங்க எங்களுக்கு நிம்மதி' என்கின்றனர் அந்தத் தொழிலாளர்கள். 

கூலி

உழைப்பாளர்களின் தினமான மே 1 அன்று கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு விசிட் அடித்தோம். கடலூர் மாவட்டம், தச்சூரைச் சேர்ந்த ஐயாதுரையிடம் பேசினோம். "ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சிருக்கேன். அதுக்கு மேல படிக்கணும்னு ஆசையிருந்தாலும் குடும்ப சூழல் இடம் கொடுக்கல. ஊர் பண்ணையார் வீட்டுல வேலை பார்த்தேன். குடும்பத்தோட தேவைக்கு அது போதுமானதா இருந்துச்சு. பக்கத்து வீட்டு அண்ணன் ராஜ்குமார் மூலமாதான் சென்னைக்கு வந்தேன். மொதநாள், மூட்டையை முதுகில் தூக்கிக்கிட்டு நடக்க கஷ்டப்பட்டேன். வலி தாங்க முடியல. குடும்ப கஷ்டத்தை நினைச்சிட்டு, வேலை பார்த்தேன். வேலை பார்த்துட்டே டீச்சர் ட்ரெயினிங் முடிச்சேன். இரண்டு வருஷ படிப்பை முடிச்சுட்டு சர்டிஃபிகேட் வாங்கினப்ப, வலியெல்லாம் பறந்து போச்சுங்க. கூட வேலை பார்க்கறவங்க கொடுத்த உற்சாகத்துல, பி.ஏ ஆங்கில இலக்கியம் படிச்சேன். இன்னும் அரசாங்க வேலை கிடைக்கல. படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கற வரைக்கும், கோயம்பேடுதான் என் உலகம்" என்றார் நிதானமாக. 

தொழிலாளர்கள்

இதையடுத்து, அரியலூரைச் சேர்ந்த சுரேஷிடம் பேசினோம். "சென்னையிலதான் பி.ஏ படிச்சேன். பகல்ல படிப்பு, நைட்ல வேலைன்னு மூணு வருஷம் உழைச்சேன். டிகிரி முடிச்சிருந்தாலும் எனக்கு சோறு போட்டது இந்தக் கூலி வேலைதான். தினமும் அதிகாலை 2 மணியிலிருந்து 11 மணி வரைக்கும் மூட்டை தூக்குவேன். குறைந்தபட்சம் 500 ரூபாய் வரைக்கும் சம்பாதிப்பேன். வேற வேலைக்குப் போகவும் மனசு வரலை. கூட்டமா சேர்ந்து உழைக்கறதுல ஒரு நிம்மதி கிடைக்குது. நைட் வேலைல போலீஸ் கெடுபிடி இருக்கும். சங்க ஐ.டி கார்டைக் காட்டினா விட்டுவிடுவார்கள். என்னைப் போலவே, கோயம்பேடு மார்க்கெட்ல மட்டும் பல ஆயிரம் பேர் கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் டிகிரி, இன்ஜினீயரிங் முடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க" என்றபடியே நம்மைக் கடந்து சென்றார். 

கூலி தொழிலாளர்கள்

"மூட்டைகளைத் தூக்கும் கூலித் தொழிலாளர்கள் எல்லாம் டீம் டீமாக வேலை பார்ப்பாங்க. ஒரு டீமில் குறைந்தபட்சம் 10 பேருக்கும் மேல் இருப்பார்கள். அவங்களுக்கெல்லாம் வழிகாட்டி மேஸ்திரிதான். மூட்டையைத் தூக்கும்போது சில நேரம் அடிபடும். மூட்டையைத் தூக்க உதவும் கொக்கியால, கண் பார்வை போனவரும் இருக்கிறார். மூட்டை தவறி விழுந்து இடுப்புக்குக் கீழே வேலை செய்யாத தொழிலாளியும் இருக்கார். அப்படியே பழகிப் போயிடுச்சு . மூட்டை அடிப்படையிலதான்  கூலி கொடுக்கறாங்க. மூட்டையோட எடையை உயர்த்தியவங்க, கூலியை மட்டும் அதிகப்படுத்தலை. 120 கிலோ எடை மூட்டையைத் தூக்கினாலும் 50 கிலோ எடையுள்ள மூட்டையைத் தூக்கினாலும் ஒரே கூலிதான். கூலியை உயர்த்தணும்னு பல வருஷமா போராடிட்டு இருக்கோம்" என ஆதங்கத்தோடு விவரித்தார் மகிமைதாஸ் என்ற தொழிலாளி.